இலங்கையின் கடன் பெறும் எல்லையை ரூ. 2,997 பில். இருந்து ரூ. 3,397 பில். ஆக அதிகரிக்க முடிவு

இலங்கையின் கடன் பெறும் எல்லையை ரூ. 2,997 பில். இருந்து ரூ. 3,397 பில். ஆக அதிகரிக்க முடிவு-Government Credit Limit Allowed for 2021 of Rs. 2,997 Billion by Another Rs.400 Billion

- 'யொவுன்புர' இற்கு பதிலாக 'Hope for Youth'
- கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து 100 மில். டொலர் கடன்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்கள்

2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நிலைமையில் அரச வருமானம் குறைவடைந்தமையும், சுகாதாரத் துறையின் செலவும் சமூகத்தில் வருமானம் இழந்தவர்களின் சமூகப் பாதுகாப்பு, தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமையாலும், இதர துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பாலும் 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளது.

அதற்கமைய 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபாய் எனும் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கொவிட் - 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடன் பெறல்
கொவிட் - 19 இற்கான தேசிய பிரயோகங்கள் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் போன்றவற்றை இயன்றளவு இலங்கையின் சனத்தொகையில் 60% வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் அடிப்படை இலக்கை விரிவாக்குவதற்கு கொவிட் முகாமைத்துவத்திற்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.

அதற்காக கொவிட் - 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் ஃபயிசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும், தடுப்பூசி வழங்கும் பணிக்கு ஏற்புடைய ஏனைய செலவுகளுக்குமான நிதியிடலுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 74 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக கீழ்வரும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 • கோட்டாபய ராஜபக்ஷ - ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் - (தலைவர்)
 • மஹிந்த ராஜபக்ஷ - பிரதமர்
 • பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்
 • தினேஷ் குணவர்த்தன - கல்வி அமைச்சர்
 • காமினி லொக்குகே - எரிசக்தி அமைச்சர்
 • ஜனக பண்டார தென்னக்கோன் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
 • கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்
 • சமல் ராஜபக்ஷ - நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
 • டலஸ் அளகப்பெரும - வெகுசன ஊடக அமைச்சர்
 • பசில் ராஜபக்ஷ - நிதி அமைச்சர்
 • வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் அமைச்சர்

4. ஸ்ரீ ஜயவர்தனபுர, மாதிவெல 'கொழும்பு பறவைகள் பூங்கா' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, மாதிவெலயில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 37 ஏக்கர் 01 றூட் 20.44 பேர்ச்சர்ஸ் காணித்துண்டில் திட்டமிடல், நிதியிடல், நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் பறவைகள் பூங்கா கருத்திட்டமொன்றும், அதனுடன் சார்ந்த பசுமை  பறவை வளர்ப்பு கட்டமைப்பு வசதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக போட்டித்தன்மையான பெறுகை முறையின் கீழ் முன்மொழிகள் கோரப்பட்டுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் கொழும்பு பேர்ட் பார்க் (தனியார்) கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த காணித்துண்டை கொழும்பு பேர்ட் பார்க் (தனியார்) கம்பனிக்கு 30 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. சுற்றாடல் மாசுறலை தடுப்பதற்காக நான்கு கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல்
பாசல் (BASEL) சமவாயத்தின் மூலம் உள்ளடக்கப்பட்டுள்ள ப்ளாஸ்ரிக் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான இரண்டு கருத்திட்ட யோசனைகளும் மனிமாட்டா  (MANIMATA)  சமவாயத்தின் மூலம் உள்ளடக்கப்பட்டுள்ள இரசம் (Mercury)  முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல்களை வகுத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டல்களுக்கான இரண்டு கருத்திட்ட யோசனைகள் அடங்கலாக சுற்றாடல் மாசுறல் மற்றும் இரசாயன திரவ உலோக முகாமைத்துவத் துறையில் 04 கருத்திட்டங்களை 2021 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான நிதியனுசரணையை வழங்குவதற்கு அபிவிருத்தி ஒத்துழைப்புக்களுக்கான நோர்வே ஏஜன்சி, மினமாடா (MINAMATA) சமவாயத்திற்குரிய விசேட சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டம் மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு போன்ற நிறுவனங்கள் உடன்பாடு தெரிவித்துள்ளன.

அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. வடமத்திய மாகாணத்தில் விவசாயப் பயன்பாடுகளால் உற்பத்தியாகும் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை முகாமைத்துவப்படுத்தல்
விவசாயப் பயன்பாடுகளுக்கான பொதிகள் அதிகமாக பொலிஎதலீன் ரெறப்தலேட், கண்ணாடி, அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன்கள் மற்றும் பொலிபுரோப்பலீன் போன்ற பதார்த்தங்களால் தயாரிக்கப்படுகின்றன.

இப்பொருட்கள் முறையற்ற விதத்தில் சுற்றாடலுக்கு அகற்றப்படுவதாலும், பயிர் நிலங்கள் மற்றும் வீடுகளை அண்டிய எரியூட்டல்களால், சுற்றாடல் மாசுபடுகின்றமையால், அவற்றைச் சரியான வகையில் மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடல் அமைச்சு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஒழுங்குபடுத்தியுள்ளது. சுற்றாடல் அமைச்சின் தொழிற்படுத்தலின் கீழ் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, பீடைநாசினிகள் பதிவாளர் அலுவலகம் மற்றும் குரொப்லயிஃப் - ஸ்ரீலங்கா (தனியார்) கம்பனியும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்திய ப்ளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி போன்றவற்றால் அகற்றப்படும் வெற்றுப் பாத்திரங்களை ஒன்று திரட்டி மீள்சுழற்சி கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கி கமக்கார அமைப்புக்கள், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்கள் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையின் வலய முகாமைத்துவ அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் வடமத்திய மாகாணத்தில் முன்னோடி கருத்திட்டமாக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக உலக சுகாதார தாபனத்தின் சுகாதாரம், நீர் மற்றும் துப்பரவு ஏற்பாடுகளை மேம்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்காக ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியுதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு சிறுபோகத்திலும் மார்ச் மாதம் இரண்டாம் வாரமும், ஒவ்வொரு பெரும்போகத்திலும் செப்ரெம்பர் மாதம் மூன்றாம் வாரத்திலும் வெற்றுப் ப்ளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி உறைகளைத் திரட்டும் வாரமாக பிரகடனப்படுத்தி விவசாய துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. விவசாயத்துறையின் ஒத்துழைப்புக்கான இலங்கை மற்றும் வியட்நாமிற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2022-2024 காலப்பகுதிக்கான செயற்பாட்டுத் திட்டம்
விவசாய ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் வியட்நாம் 2006 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய வியட்நாமின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்புக்கள் திணைக்களம் மற்றும் இலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கைகள் சபையின் இருதரப்பு உடன்பாடுகளுக்கமைய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கமைய, 2010-2011 ஆம் ஆண்டு மற்றும் 2017-2019 ஆண்டுகளுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான விவசாய ஒத்துழைப்புக்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இருதரப்பினரின் உடன்பாடுகளுக்கமைய 2022-2024 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கான உடன்பாட்டில்  கையொப்பமிடுவதற்கும் விவசாய அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. காலி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம்
பிராந்திய வர்த்தகத் துறைமுகமாக நடாத்திச் செல்வதற்கு இயலுமான வகையில் 'சுற்றுலா ஈர்ப்பு  மற்றும் பாதுகாப்பான இறங்குதுறை' எனும் தொனிப்பொருளின் கீழ் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச – தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டமாக சம்பிரதாய வரையறைகளுக்கு மட்டுப்பாடுகள் விதிக்காமல், தனியார் துறையின் முதலீடுகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் காலி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. கொழும்பு 15, அலுத்மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்று வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைத்தல்
வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனம் 1979 ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகையை துறைமுகங்கள் ஆணைக்குழுவுக்குச் செலுத்தி கொழும்பு 15, அலுத்மாவத்தையில் 18 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்றை பெற்றுக்கொண்டுள்ளது.

குறித்த காணியில் 1982 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனத்தின் செலவில் 05 பொருத்து வீடுகள் நிர்மாணித்துள்ளதுடன், அவற்றில் 03 வீடுகள் துறைமுக அதிகாரசபையின் பாவனைக்கும் 02 வீடுகள் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனத்தால் குறித்த காணித்துண்டுக்கு அரச மதிப்பீட்டுத் தொகையை செலுத்தினாலும், அதன் உரிமை இதுவரை சட்டரீதியாக வழங்கப்படவில்லை.

அதற்கமைய, 29.53 பேர்ச்சர்ஸ் கொண்ட குறித்த காணித்துண்டை வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்;  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 'இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் - Hope for Youth ' - தேசிய இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம்
இலங்கை சனத்தொகையில் 15-29 வயதுடைய இளைஞர்கள் 23.2% வீதமாக அமைவதுடன், அது எண்ணிக்கை ரீதியாக 5.6 மில்லியன்களாகும்.

இளைஞர் சமூகத்தை எமது நாட்டின் அபிவிருத்தியில் முனைப்பாக பங்கேற்புச் செய்யும் நோக்கில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்களுக்கு விளித்துக்கூறும் வகையில் 'இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் - Hope for Youth ' – எனும் தேசிய இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சால் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இளைஞர் சமூகத்தில் நிலவும் 28% வீதமான தொழிலின்மையை 12% வீதமாகக் குறைப்பதும் இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய, 2019 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட 'யொவுன்புர' நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பதிலாக 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 'இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் - Hope for Youth ' – நிகழ்ச்சித்திட்டத்தை அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் இலக்கு வைத்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நிச்சயிக்கப்பட்ட எதிர்கால செலாவணி ஒப்பந்தத்தின் மூலம் சந்தையில் போட்டித்தன்மையை உருவாக்கி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிலைப்படுத்தும் வேலைத்திட்டம்
நிச்சயிக்கப்பட்ட எதிர்கால செலாவணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலையான விலையின் கீழ் லங்கா சதொச நிறுவனத்திற்கு அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2021.04.27 அன்று அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று (03) மாத காலத்திற்கு நிச்சயிக்கப்பட்ட எதிர்கால செலாவணி ஒப்பந்தத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக பொது அறிவித்தல் மூலம் விநியோகத்தர்களின் விருப்ப ஒப்புதல்கள் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, கிடைக்கப்பெற்றுள்ள விருப்பு ஒப்புதல்களில் தெரிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களுடன் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த விடயங்கள் தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.