பால் தேவைக்காக 4,200 பசுக்கள் இறக்குமதி; ரூ. 827.5 கோடி முதலீடு; 30 வருட குத்தகைக்கு 2,771 ஏக்கர் காணி

பால் தேவைக்காக 4,200 பசுக்கள் இறக்குமதி; ரூ. 827.5 கோடி முதலீட்டுக்கு 30 வருட குத்தகைக்கு 2,771 ஏக்கர் காணி-Cabinet Decisions-Approval to Import 4200 Dairy Cows

- 'நெணச' கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றெடுத்த வீரர்களுக்கு பணப்பரிசு

இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள்

நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, பாலின் தேவையின் அடிப்படையாகக் கொண்டு 4,200 பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இதற்காக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை மற்றும் கால்நடை அபிவிருத்திச் சபைக்கும் சொந்தமான, 2,771 ஏக்கர் காணிகளை ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் உள்ளிட்ட 5 தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்நிறுவனங்களின் ரூ. 8 பில்லியன் (ரூ. 8,275 மில்லியன்/ ரூ. 827.5 கோடி)  முதலீட்டுக்காக தற்போது பயன்பாட்டுக்கு உட்படுத்தாத பயிர்ச் செய்கைக்கு உதவாத நிலையிலுள்ள குறித்த காணியை 30 வருட குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருடாந்தம் 22 மில்லியன் லீற்றர் பாலை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் தேவைப்பாடான இத்திட்டத்திற்கு முற்றுமுழுதாக தனியார் நிறுவனங்களே முதலீடு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பால் தேவை வருடாந்தம் 722 மில்லியன் லீற்றர் எனத் தெரிவித்த அமைச்சர், தற்போது 422 மில்லியன் லீற்றர் பாலே நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். இது 40% உற்பத்தியேயாகும்.

அதற்கமைய, 60% ஆன பால் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

அந்த வகையில் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான பால்மா இறக்குமதி செய்யப்படுவதோடு, வருடத்திற்கு 365 மில்லியன் டொலர் பெறுமதியான பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் 4,200 பசுக்களை 5 வருடங்களில் 25,000 பசுக்களாக இனப்பெருக்கம் செய்யவும் இந்த முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகள்
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்
இலங்கையின் திரவப்பால் தேவையின் 40% வீதமானவை உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஏனையவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.

அதனால், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான யோசனைகள் இலங்கை முதலீட்டு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை முதலீட்டுச் சபை, ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களின் யோசனைகளைக் கோரியுள்ளதுடன், குறித்த சபையின் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருத்திட்ட யோசனைகளை சமர்ப்பித்தவர்களுக்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக கீழ்க்குறிப்பிட்ட வகையில் 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • H.B.K.I.R International Investment/ Access Agro (Pvt) Ltd  நிறுவனத்திற்கு 700 ஏக்கர்கள் மற்றும் Pesara Logistics நிறுவனத்திற்கு 60 ஏக்கர்களும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நிக்கவெரட்டிய பகுதியில் அமைந்துள்ள பண்ணையில் ஒதுக்கி வழங்கல்.
  • அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம் மற்றும் மவுன்ட் ஜின் தோட்டங்களில் 811 ஏக்கர்கள் Farm’s Pride (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்
  • அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ் வெலி தோட்டங்களில் முறையே, 200 ஏக்கர்கள் மற்றும் 150 ஏக்கர்களை Hillside Agro  (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்
  • தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கொட்டுக்கச்சிய பண்ணையில் 250 ஏக்கர்களை Gamma Pizzakraft  (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்

2. கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையில் கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 'நெணச' கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான இரண்டு அலைவரிசைகள் மூலம் டயலொக் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் செய்மதி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி 'நெணச' எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் டயலொக் நிறுவனத்தால் கிட்டத்தட்ட 2,200 பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் மற்றும் டயலொக் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த இணைப்புக்களுக்கான மாதாந்தக் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்டது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 'நெணச' கருத்திட்டத்தில் புதிய இரண்டு அலைவரிசைகள் உள்ளடங்கலாக 04 அலைவரிகள் மூலம் 2021 செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் மொத்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கும், டயலொக் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

3. 2020 டோக்கியோ பராஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியனுசரணை வழங்கல்
2020 பராஒலிம்பிக் போட்டிகளில் F46 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை தினேஷ் பிரியந்த ஹேரத்தும், F64 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சமித்த துலானும் F64 வென்றெடுத்துள்ளதுடன், அதன் மூலம் அவர்கள் தாய்நாட்டுக்கு விசேட வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள தேசிய விளையாட்டுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பணப் பரிசுகளை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்படி வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இருவருக்கும் தேசிய விளையாட்டுக்கள் சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளும் ஒரு கட்டிடத்தில் நிறுவுதல்
தற்போது வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்ற ஜனரஜ கட்டிடத்தில் போதுமானளவு இடவசதியின்மையால் குறித்த அமைச்சின் சில அலகுகள் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே சில இடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றது. அதனால் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

அவ்வாறே, சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் வெளிவிவகார அமைச்சுக்கு போதியளவு வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணித்துண்டை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வித்யா மாவத்தையில் அமைந்துள்ள தற்போது தொழிநுட்பவியல் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகின்ற காணியிலிருந்து ஒதுக்கிக் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்;துள்ளது.

5. வயம்ப மஹஎல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தல்
மகாவலி ஆற்றில் வழிந்தோடும் மேலதிக நீரை வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணங்களில் காணப்படும் கிளை ஆற்றுப்படுக்கைகளில் வாழும் கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார செயன்முறைக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், குறித்த பிரதேசங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான முன்னுரிமை கருத்திட்டமாக மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நான்கு வருடங்களில் 88.9 கிலோமீற்றர்கள் நீளமான வயம்பஎல மற்றும் 95.7 கிலோமீற்றர்கள் நீளமான வடமத்திய மஹஎல போன்ற செயற்கை ஆறுகள் இரண்டையும் நிர்மாணிப்பதற்கும், 07 புதிய நீர்த்தேக்கிக் களஞ்சியங்கள் மூலம் 1,500 கிராமியக் குளங்களைப் போசிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது தெதுறு ஓயாவை குறுக்கறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் பணிகள் மற்றும் அதன்கீழுள்ள கட்டுமானங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தின் கீழ் 200 சிறிய குளங்கள் மூலம் 25,000 ஏக்கர்களில் இருபோகங்களும் பயிரிடக்கூடிய வகையில் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கும், 50,000 புதிய நுகர்வோர்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்குவதற்கும், 1.5 மெகாவாற்றுடன் கூடிய மீள்பிறப்பாக்க எரிசக்தி கருத்திட்டத்தின் மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி இரண்டு கருத்திட்டங்களின் கீழ், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக குறைப்பயன்பாட்டு அபிவிருத்தி கொண்ட பிரதேசங்களை துரிதப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறை மூலம் அபிவிருத்தி செய்வதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வலயங்களுக்கு ஏற்புடைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த முதலீட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து எதிர்வரும் மூன்று வருடங்களில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் 410 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு அதிகார எல்லைப் பிரதேசத்தை, 1979 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் கீழ் மகாவலி விசேட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்தி ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளுக்கு சலுகை வழங்கல்
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தொடர்பான தரவுத் தொகுதியொன்றை தயாரித்துக் கொள்வதற்கும் பொறிமுறையொன்றை முன்மொழிவதற்கும், உத்தியோத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் 2020 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உகந்த சலுகைகள் தொடர்பாக குறித்த உத்தியோகத்தர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் (Anti - personnel mines) தடை செய்யும் சட்டமூலம்
1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்தல் தொடர்பான இராஜதந்திர மாநாட்டில், ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பாவனை செய்தல், இருப்பில் வைத்திருத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றை தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான சமவாயத்தின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையில் குறித்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டத்தை வகுப்பதற்கான பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குண்டு. அதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தொழிநுட்ப பூங்காக்களை அமைத்தல்
2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 05 தொழிநுட்ப பூங்காக்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைக்கு அணுகக்கூடிய வசதிகள், சுற்றுலாப் பயணிகளைக் கர்ந்திழுக்கக் கூடிய, தேவையான மனித வளத்துடன் கூடியதும் ஏனைய இதர சேவைகளைக் கருத்தில் கொண்டு குறித்த தொழிநுட்பப் பூங்காக்களை அமைப்பதற்குப் பொருத்தமான இடங்கள் தொழிநுட்ப அமைச்சால் அடையாளங் காணப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை வணிக ரீதியான தொழில் முயற்சிகளாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் திறைசேரி செயலாளருக்கு ஒட்டுமொத்த பங்குரிமை உரித்தாகும் வகையில் தொழிநுட்ப பூங்காக்கள் அபிவிருத்திக் கம்பனி எனும் பெயரிலான கம்பனியை நிறுவுவதற்கும், எதிர்வரும் காலங்களில் குறித்த கம்பனியை கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்து தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு குறித்த கருத்திட்டத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...