24 நாட்கள் நாடு மூடப்பட்டதால், இ.போ.சவுக்கு ரூ. 192 கோடி வருமானம் இழப்பு

24 நாட்கள் நாடு மூடப்பட்டதால், இ.போ.சவுக்கு ரூ. 192 கோடி வருமானம் இழப்பு-SLTB Loses Rs 1920 million During this 24 Days Lockdown

கொவிட் பரவல் காரணமாக நாடு 24 நாட்கள் மூடப்பட்டதால் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சுமார் ரூபா 192 கோடி (ரூ. 1,920 மில்லியன்) வருமானத்தை இழந்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் தாவான பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரு நாளில் பஸ்கள் இயங்காமை காரணமாக சுமார் 80 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென தெரிவித்த பிரதிப் பொது முகாமையாளர், கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக இன்று (13) வரை தினமும் இவ்வாறு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கொவிட் காரணமாக, மாதாந்தம் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், நாடு சாதாரண நிலையில் இருக்கும்போது, இ.போ.ச.வுக்கு விடுமுறை தினங்கள் உள்ளிட்ட ​​மாத வருமானம் ரூ. 800 - 850 மில்லியனை விட அதிகமென அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தற்போது மூடப்பட்டிருந்தாலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் சுமார் 350 பஸ்கள் இயங்குவதாக தெரிவித்த அவர், அதிலுள்ள பயணிகளின் எண்ணிக்கையை விட இந்நேரத்தில் நாம் வழங்கப்படும் சேவை தொடர்பிலேயே கவனம் செலுத்துகிறோம். ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சேவை கோரும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் எனவும், சேவையை முடித்தவுடன் அவர்களை உரிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். இவை அனைத்தும் சுகாதார வழிகாட்டல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களின்படி மேற்கொள்ளப்படுமென அவர் கூறினார்.