NMRA தகவல் அழிந்தமை தொடர்பினல் கைதான CEO பிணையில் விடுதலை

NMRA தகவல் அழிந்தமை தொடர்பினல் கைதான CEO பிணையில் விடுதலை-NMRA Data-Thareendra Kalpage-the CEO of Epic Technologies-Released on Bail

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) தரவுகள் அழிந்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட அதனை நிர்வகித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தரீந்திர கல்பகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Epic Lanka Technologies நிறுவனமே குறித்த தரவு தளத்தை பேணிய நிலையில், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி தரீந்திர கல்பகே குற்றப் புலாய்வு திணைக்களத்தினால் (CID) நேற்றையதினம் (08) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்றையதினம் (09) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

சந்தேகநபரை தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

NMRA இற்குச் உரித்தான முக்கிய தரவுகள் கொண்ட கோப்புகள் பல அழிந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த ஜூலை மாதம் அழிக்கப்பட்டமை அறிய வந்துள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையானது, மருத்துவ சாதனங்கள், மருந்துகள், மருந்தகங்கள் தொடர்பில் அனுமதிப்பத்திரம் வழங்கும் அரச நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தரவுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவு களஞ்சியத்தில், இலங்கையின் மருந்து விநியோக முகவர் நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், மருந்துகளை பதிவு செய்த தரவுகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், மருந்து மாதிரிகளை பரீட்சித்தல் அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட, 11 இலட்சம் கோப்புகள் இவ்வாறு அழிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து NMRA நிறுவனத்தால் குறித்த தரவு சேமிப்பு களஞ்சிய கட்டமைப்பை பேணி வந்த நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த தரவுகள் அந்நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவரினால் தவறுதலாக அழிக்கப்பட்டதாக குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாமென பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, CID யினால் குறித்த தரவுக் களஞ்சியத்தை பேணி வந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி நேற்றையதினம் (08) கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனத்தின் (ICTA) கீழுள்ள cloud சேமிப்பக கட்டமைப்பை இற்றைப்படுத்துவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.