மூடப்பட்ட கண்டி நகர 45 பாடசாலைகளில் 42 திறப்பு

மூடப்பட்ட கண்டி நகர 45 பாடசாலைகளில் 42 திறப்பு-42 Out of 45 Schools in Kandy Reopen

- கண்டி நகர 3 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடல்
- அக்குரணை பாடசாலைகளும் தொடர்ந்து மூடல்

கொரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்திற்கொண்டு, தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (14) ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி திரித்துவ கல்லூரி, கலைமகள் வித்தியாலயம், தக்ஷிலா கல்லூரி ஆகிய பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (10) மத்திய மாகாணத்தின் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பான குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் வீடு ஆகியன பாதுகாப்பான இடங்களாக காணப்படுகின்றபோதிலும், பாடசாலைக்கு போய் வரும் வழியிலேயே அவர்கள் பாதிப்புறும் வாய்ப்பு காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் வேளைகளில் அதிகளவிலான பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்துவதாக, போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆளுநர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளை உச்ச அளவில் பேணுமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர்களூடாக, அதிபர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டிருந்த அக்குரணை பிரதேசத்திலுள்ள 5 பாடசலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், அப்பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை, கண்டி மாநகர பகுதியில் அமைந்துள்ள 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவினால் இன்று (11) வரை மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது கண்டி நகர எல்லைக்குட்பட்ட 42 பாடசாலைகளை மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய  ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...