தரம் 6இற்கு மாணவர்களை இணைத்தல் Online இல்

தரம் 6இற்கு மாணவர்களை இணைத்தல் Online இல்-Admission to Grade 6 for Grade 5 Scholarship Students-Online

- டிசம்பர் 24 வரை அதிபர்களால் மேற்கொள்ளப்படும்

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் 6 இற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (10) முற்பகல் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில், கல்வியமைச்சில் இடம்பெற்றது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதோடு, அதற்கமைய, மாணவர்கள் கோரும் பாடசாலைகள் உள்ளிட்ட, குறித்த விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்களை, இணையத்தில் உள்ளீடு செய்வது, அதிபர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தரம் 6இற்கு மாணவர்களை இணைத்தல் Online இல்-Admission to Grade 6 for Grade 5 Scholarship Students-Online

இன்று (10) முதல் டிசம்பர் 24ஆம் திகதி வரை, தமிழ், சிங்கள மொழி மூலம் இத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்பு,  அதிபர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மொபிடெல் நிறுவனத்தின் அனுசரணையில் ரூபா 7.5 மில்லியன் செலவில், இவ்வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதற்காக, 1952ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம், மாவட்ட மட்டத்திலான வெட்டுப் புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளைப் பெறும் அனைத்து மாணவர்களுக்கும், வசதிகளைக் கொண்ட பாடசாலைகளில் அனுமதிக்க வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இப்பரீட்சைக்கு 326,264 மாணவர்கள் தோற்றியதோடு, 47,193 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்று, புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த வருடங்களில் பாடசாலை, வலயக் கல்வி அலுவலகம், கல்வி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும், அதிகாரிகளினதும் ஈடுபாட்டுடன், மேலும் பலரை உள்ளடக்கியதாக, மேற்கொள்ளப்பட்ட இந்த ஒன்லைன் திட்டம் மூலம் மிகவும் வெளிப்படையான, துல்லியமான மற்றும் திறனானதான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை ஒன்லைனில் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவியுடன் மூன்று வருடங்கள வரை தனது சேவைகளைத் தொடர மொபிடெல் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன், அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.எஸ்.எம்.டி.கே. ஜயசேகர, கல்வி அமைச்சின் மேலதிகச் பள்ளி செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்) எல்.எம்.டி தர்மசேன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் மொபிடல் பிரதான நிறைவேற்று அதிகாரி லலித் செனவிரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...