முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங், தனது 82ஆவது வயதில்  காலமானார்.
 
உடல்நலக் குறைவால் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஜஸ்வந்த் சிங் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பியாக இருந்தவர். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். தேசத்திற்காக விடா முயற்சியுடன் பணியாற்றியவர். அரசியலில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றிய தலைவர். அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.(சு)

Add new comment

Or log in with...