இவ்வருடம் இதுவரை 19,940 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

- மேல் மாகாணத்தில் ஆகக்கூடுதலாக 5,535 பேர்

இவ்வருடத்தின் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் காரணமாக சுமார் 22 உயிரிழப்புகள்  சம்பவித்துள்ளதோடு, 19,940 பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான நுளம்புகளின் இனப்பெருக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென்பதோடு, அவற்றை வழக்கமான நடைமுறையில் அழிக்க வேண்டும். நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்வதற்காக வாரத்தில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களையாவது ஒதுக்க வேண்டும். கட்டுமானத் தளங்கள், நுளம்புகள் பெருகுவதற்கு மிகவும் வாய்ப்பான இடமாகுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 5,535 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 2,841 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், இதே காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில்  2,121 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2,213 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,829 டெங்கு நோயாளர்கள் இதே காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள் தமக்கு காய்ச்சல் ஏற்பட்டு முதல் நாளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்கள் தமக்கு எவ்வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும், எந்தவித கை வைத்தியத்திலும் ஈடுபடாது, இரண்டு நாட்களுக்குள் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென, வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 


Add new comment

Or log in with...