- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா
- தடுப்பு முகாம்களிலிருந்து வந்தவர்களே அதிகம்
- நாளைய கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவு
கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும்.
நோய்த்தொற்று உலகளாவிய ரீதியில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 33 இலங்கையர்கள் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாத்திரை சென்று இந்தியாவின் சில நகரங்களில் நிர்க்கதியாகவிருந்த 839 இலங்கையர்கள் மார்ச் 19 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர்.
கடந்த மே 25ஆம் திகதியாகும் போது 20நாடுகளில் இருந்து 5485 பேர் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் 4826 பேர் வெளிவிவகார அமைச்சினாலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களினாலும் இனம்காணப்பட்டவர்களாகும். பீசீஆர் பரிசோதனையின் பின்னர் அவர்களில் 5% ஆனோர் அல்லது 0.01 வீதமானோர் கொரோனா நோய்த்தொற்றுடையவர்களாக உறுதிசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து வருகை தந்த 197 பேரில் 22 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் என உறுதிசெய்யப்பட்டது. குவைத்திலிருந்து வருகை தந்த 462 பேரில் 150 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 96 பேர் கொரோனா நோயாளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர். மேலும் 300 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
குவைத்திலிருந்து நாட்டுக்கு வருகைதந்த அனைவரும் பல்வேறு காரணங்களினால் அந்நாட்டில் தடுப்புநிலையங்கள் அல்லது நாடுகடத்தப்படுவதற்கான முகாம்களில் இருந்தவர்களாகும். நோய்த்தொற்றுடையவர்களாக இனம்காணப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் முக்கியமானதாகும். இந்த பின்புலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் முறைமையை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழைத்துவரப்படாத போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிலைமைகளை மனிதாபிமான ரீதியாக நோக்கி அவர்களை அழைத்து வரும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய முறைமையை தயாரிப்பதற்காக நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே, விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
Add new comment