சம்பிக்க ரணவகவின் சாரதிக்கு பிணை

சம்பிக ரணவகவின் சாரதிக்கு பிணை-Driver of Champika Ranawaka Released on Bail

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகவின் சாரதி திலும் துசித குமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016 இல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (06) கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த விண்ணப்பத்தை எதிர்த்த கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், சிறையில் வைத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில் சந்தேகநபரான முன்னாள் அமைச்சரின் கையடக்க தொலைபேசி, அவரது சாரதியிடம் இருந்ததாக, முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள போதிலும், அவரது தொலைபேசியும அவரது சாரதியின் தொலைபேசியும் வெவ்வேறு திசைகளில் பயணித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகநபரான துசிதா குமார, ஒரு பிரபலமான நபரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக, அவர் பொலிசாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளதாக தெரிவித்த, அரச பிரதி சொலிசிட்டர் நாயகம், அதற்கு சட்டத்தரணிகளும் உடந்தை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கப்பட்டால் விசாரணை நடவடிக்கை பாதிக்கப்படும் என்பதால், அக்கோரிக்கையை நிராகரிக்குமாறு பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றை கோரினார்

எவ்வாறாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதன் மூலம், சாட்சியம் வழங்கவுள்ள சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஏற்கக்கூடிய காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்து அவரை பிணையில் செல்வதற்கு  உத்தரவிட்டார்.

அதற்கமைய, சந்தேகநபரை ரூபா 250,000 கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த டிசம்பர்18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகவும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...