சீயோன் குண்டுதாரியின் உடற்பாகங்கள் காத்தான்குடியில் புதைப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை(27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதைக்கப்பட்டது. 

தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந் நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி இரவோடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அரசில் வாதிகள் இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடினர்.

இந் நிலையில் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் இதனை பொருத்தமான இடத்தில் அரசாங்க அதிபரூடாக புதைக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதற்கமைய உடற்பாகங்களை நேற்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி 3ஆம் குறிச்சியிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலை பிரேத அறையிலிருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பெறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் இந்த மையவாடியில் புதைக்கப்பட்டது

இதனை புதைக்கும் போது இஸ்லாமிய மார்க்க கடமைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் போது பெருமளவிளான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதி நசார் முகம்மட் ஆசாத் என்பவரின் தலைப் பகுதி கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசாரினால் புதைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இதை தோண்டி அகற்றுமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பில் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பொலிசாரினால் இந்த விவகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். றிஸ்வான் புதைக்கப்பட்ட இந்த தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதியை தோண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து, தகுந்த இடத்தில் புதைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி கடந்த செப்டெம்பர் 02 ஆம் திகதி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத நீதிபதி ஐ.எம். றிஸ்வான் முன்னிலையில் தோண்டப்பட்டு, அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...