ரத்கம கொலை: பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடமைக்கு திரும்பாத 5 கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாடு செல்ல தடை

ரத்கம, ரத்னஉதாகமவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

ரத்கம, ரத்னஉதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த மாதம் 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற 5 கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாடு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அக்மீமண, கொணாமுல்லவிலுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வலஸ்முல்ல, மெதகங்கொட பகுதியிலுள்ள காட்டுப் காட்டுப்பகுதியில் இன்று பல எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீட்டிலிருந்து, இரத்த மாதிரிகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான 7 பொருட்களை, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள தென் மாகாண விசேட பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்தவின் கையடக்க தொலைபேசியையும் பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...