ஞானசார நீதிமன்ற அவமதிப்பு; தீர்ப்பு ஓகஸ்ட் 08

ஞானசார நீதிமன்ற அவமதிப்பு; தீர்ப்பு ஓகஸ்ட் 08-Gnanasara Theros Case-Judgement on Aug 08

 

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் 08 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இதனை அறிவித்தது.

குறித்த வழக்கு விசாரணையின் போது, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரும் அங்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணையின் போது, வழக்கின் வாதியான சந்த்யா எக்னலிகொடவுக்கு ஞானசார தேரர் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக சந்த்யா எக்னலிகொட தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில், கடந்த ஜூன் 22 ஆம் திகதி ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதோடு, வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆயினும் குறித்த நீதிமன்ற அவமதிப்பு விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரினால், மேன்றுமுறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...