மேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை

சந்த்யா எக்னலிகொட மேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை-Gnanasara Released on Bail in Sandhya Ekneligoda Trial

 

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் 6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு வழக்கிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (22) குறித்த மனு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீர பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதோடு, வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் வருடம் ஞானசாரதேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியாக, ஞானசார தேரர் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றம் அறிவித்ததோடு, அதற்கான தீர்ப்பை கடந்த ஜூன் 14 ஆம் திகதி அறிவித்திருந்தது.

குறித்த தீர்ப்பை எதிர்த்து, அதற்கு அடுத்தநாள் (15) ஞானசார தேரரினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

குறித்த மேன்முறையீடு தொடர்பில் கடந்த ஜூன் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பான அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில், இன்றைய தினம் (22) பிற்பகல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமாகம நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தேரர், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டு நீதிமன்றிலிருந்து வெளியேறிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில், இடம்பெற்ற வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 இராணுவ புலனாய்பு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதவானாக கடமையாற்றிய ரங்க திஸநாயக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, திறந்த நீதிமன்றில் சந்த்யா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

கடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, சந்த்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் தொடர்பில், எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் நீதவானிடம் முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும் வழங்கியிருந்தார்.

 


Add new comment

Or log in with...