பிக் போஸ் 38 ஆம் நாள்: நள்ளிரவில் ஓவியா - காயத்ரி சண்டை

திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்குள் எழுந்துகொண்ட ஆரவ்வும் ஓவியாவும் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். புல்வெளியில் இருந்த பறவையொன்று ஒரு பூச்சியை வேட்டையாடிக் கொண்டிருந்தது நல்ல குறியீட்டுக் காட்சி. 

ஆரவ் – ஓவியா, பரஸ்பரம் இருவரில் எவர் எவரை வேட்டையாட முயல்கிறார்கள் என்று தெரியவில்லை. உரையாடலைத் துண்டித்துக் கொண்டு ஆரவ் சட்டென்று விலகினார். 

ஓவியா

போகனின் திரைப்படப் பாடல் வரிகள் ஒலித்தன.  சூழலுக்குப் பொருத்தமான பாட்டு. ஜூலியும் பிந்து மாதவியும் ஒரு துள்ளலிசைப் பாடலைப் பாட முயன்று கொண்டிருந்தனர். ‘லிரிக்ஸை சரியா நினைவுப்படுத்திப் பாடு’ என்று குறுக்கிட்டார் ஓவியா. அங்கு வந்த காயத்ரி, ஜூலியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து உடனே வெளியேறினார்.  

இந்த நிகழ்ச்சியை எவராவது தாமதமாகப் பார்க்கத் தொடங்கினால்கூட அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் ஓவியா சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் பிறகு தன்னுடைய பிரத்யேகமான நாடகத்தனத்துடனும் கிண்டலுடனும் மற்றவர்களுக்கு காயத்ரி விளக்குகிறார். ஒரு replay. தாமதப் பார்வையாளர்கள் இதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். 

ரைசாஓவியா அருகிலிருக்கும் ரைசாவுடன் பேசமுயலும்போது அவரும் உரையாடலைத் துண்டித்துக்கொண்டு வெளியேறுகிறார். மிகுந்த மனக்கசப்புடன் ‘மகிழ்ச்சி’ என்கிற சொல் ஓவியாவின் வாயிலிருந்து வருகிறது. என்னவொரு முரண்நகை. 

‘இனிமே அவளை எங்களோடு சேர்த்துக் கொள்கிறோம்’ என்று நேற்று பாவனைக்காவது சொன்ன காயத்ரி முதற்கொண்டு ஏறத்தாழ எல்லோருமே (குறிப்பாக பெண்கள்) ஓவியாவை ஏன் இத்தனை கடுமையாக வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் கோணத்தில் இதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாமோ? அந்தக் காட்சிகள் நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.  

ஓவியாவை, ரைசா அடிக்கடி ‘மென்ட்டல்’ என்கிற அடையாளத்துடன் குறிப்பிடுவது ஆட்சேபத்திற்குரியது. படித்த மேன்மக்கள் இப்படி எவ்வித நுண்ணுணர்வுமில்லாமல் சொற்களுக்கான அர்த்தம் புரியாமல் அவற்றை இறைப்பது வேதனை. நம் கல்விமுறையின் லட்சணம் இங்கு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் பாமரர்கள்கூட சமயங்களில் சரியாக இருப்பார்கள். 

ஊரிலுள்ள எல்லோரும் நிர்வாணமாகத் திரியும்போது கோவணம் கட்டியவன் ‘பைத்தியக்காரன்’ என்றொரு பழமொழி இருக்கிறது. ‘பிக் பாஸ்’ வீட்டில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அந்தந்தச் சூழலுக்கேற்ப முகமூடிகளை மாட்டித் திரியும்போது அவ்வாறான ஜாக்கிரதையுணர்வு ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே தன் உணர்ச்சிகளை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் ஓவியா மனநலம் பிசகியவராக மற்றவர்களுக்குத் தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. 

கொடுமையான மாமியாரும் நாத்தனார்களும், கோழைத்தனமான கணவனும் உள்ள கூட்டுக்குடும்பத்தில் அவதிப்படும் ஒரு புது மருமகளின் சித்திரமே ஓவியாவைப் பற்றி நமக்குக் கிடைக்கிறது. என்னவொன்று இந்த மருமகள் அடங்கிப் போகிற மருமகளாக இல்லை. தான் விரும்புவதை அடைய விரும்பும் வீம்புக்காரியாக இருப்பதுதான் அடிப்படையான பிரச்னை. 

ஆரவ்வை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று காயத்ரி தொடர்ந்து முனைகிறார். அவர்கள் அப்படி சுற்றி நின்று கொண்டிருப்பதே கூட ஓவியாவிற்கு அதிக உளைச்சலைத் தரக்கூடும் எனத் தோன்றுகிறது. ஆரவ்வின் மீதுள்ள possessives-ம் ஓவியாவின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதிலும் ஒருவர் புலம்பும்போது, ரைசா சிரிக்கும் அந்தக் காட்சி , காயத்ரியை விடவும் ரைசாவின் பிம்பத்தின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

ரைசா

**

நேற்று நிகழ்ந்தது போல இன்னொரு கேலிக்கூத்தான ‘task’ பிக் பாஸால் தரப்பட்டது. ‘இது சீக்ரெட் பார்முலா, இதை எல்லோரிடமும் காட்டுங்கள்’ என்கிறார் பிக் பாஸ். அப்புறம் அது என்ன சீக்ரெட்? 

இந்தக் கேலிக்கூத்து ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்றைய நாளின் பெரும்பாலான தருணங்கள், ஆரவ் – ஓவியா இருவரின் இடையிலான சிக்கலில் மையம் கொண்டிருந்தன. இருவரில் எவர் நடிக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் சற்று நிதானமாக சமநிலையுடன் யோசித்தால் நியாயத் தராசு ஓவியாவின் பக்கம் சாயக்கூடும். 

இன்றைய நாளின் காட்சிகளை வைத்து ஒட்டுமொத்த நிலைமையை யூகிக்க முயல்வோம். நம்மால் யூகிக்கத்தான் முடியும். உண்மை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. அவற்றைக் கொண்டும் ஓர் உண்மையை நிரூபிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. விலாங்கு மீனை பிடிப்பதற்கு நிகரான செயல் இது. 

ஓவியா ஆரவ்வை பார்க்கும் பல முகபாவங்களைக் கவனித்தால் உண்மையான காதலுணர்வும் தவிப்பும் தென்படுகிறது. அதில் நடிப்பிருப்பதாகத் தெரியவில்லை. 

ஐந்து என்கிற எண்ணிற்கும் பிக் பாஸிற்கும் அத்தனை ராசியில்லை போல. ‘ஐந்து விநாடி வீடியோ’ என்று முன்னர் ஜூலி டீம் பினாத்திக் கொண்டேயிருந்தது. இப்போது ஓவியாவின் முறை. ‘ஐந்து நிமிஷம் பேசணும்’ என்று ஆரவ்விடம் இன்றைய நாள் முழுக்கத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்படிக் கிடைத்த சமயத்தை சரியான தெளிவுடன் அவர் பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை. 

ஓவியா

“நீ ஏன் என்னை இப்படிப் பண்ணே.. அப்படியெல்லாம் பழகினே.. முத்தம் தந்தே.. இப்ப மாறிட்டே.. friend-ன்னு சொல்றே.. எப்படி சட் சட்டுன்னு அப்படி மாற முடியும். என்னால அப்படி மாற முடியாது. நீ என்னை ஏமாத்திட்டே” என்பதைத்தான் விதம் விதமாகச் சொல்கிறார் ஓவியா.

நட்பு என்பதை மீறி காதல் என்கிற உணர்விற்கு இடம் தந்து ஆரவ் பழகியிருக்கிறாரோ என்கிற சந்தேகம் இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. ஓவியாவின் புகார்களின் மூலமாக அதுகுறித்த பின்னணிக் காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது.  நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் அந்த மர்மம் உறைந்திருக்கலாம். காட்டப்பட்ட காட்சிகளில்கூட சில உதாரணங்கள் நமக்குத் தென்பட்டன. ஒருமுறை ஓவியா கடந்து சென்றபோது ஆரவ் விளையாட்டாக அவரைப் பின்புறம் உதைத்தது ஓர் உதாரண தருணம். 

தாம் ஒரு ரியாலிட்டி ஷோவின் விளையாட்டிற்குள் வந்திருக்கிறோம், அப்படியாகவே இதைக் கடந்து செல்வோம் என்கிற உணர்வு சிறிது கூட ஓவியாவிடம் தென்படுவது போல இல்லை. மேலும் மற்றவர்களைப் பற்றியும் அவர் கவலைப்படுவது போலத் தெரியவில்லை. ‘எனக்கு இந்த பொம்மை வேணும்’ என்று அடம்பிடிக்கிற குழந்தையின் மனப்பான்மையே அவரிடம் ஓங்கியிருக்கிறது. 

இருக்கிற போட்டியாளர்களிலேயே அதிக இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும், புறம் பேசாதவராகவும் இதுவரை கருதப்பட்ட ஓவியாவின் எதிர்திசை பிம்பம் இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. டி.வி. சீரியல் போலவே அவரின் அழுகைச் சத்தம் இன்று முழுக்க ஓயவேயில்லை நாம் பார்த்து வந்த ஓவியா அல்ல இது. இது நாள் வரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த உணர்ச்சிகள் எல்லாம் இப்போது கட்டவிழ்ந்து காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறதோ?

ஓவியாஎந்தக் குணாதிசயங்களுக்காக அவர் மக்களால் கொண்டாடப்பட்டரோ அவற்றையெல்லாம் மெல்ல இழந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அங்கிருந்து வெளியேறினால் போதும் என்பதற்காக வேண்டுமென்றே செய்கிறாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது.  

ஆனால் அவருடைய நோக்கில் இதைப் பார்த்தால் ‘அவருக்கு ஆரவ்தான் முக்கியம்’ என்று நினைக்கிறார் போல. நாம் கொண்டாட வேண்டும் என்பதற்காக அவர் முன்பு பின்பற்றிய குணாதிசயங்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது முறையானதல்ல. ‘அடி.. அவனை அடி.. என்று மேடையின் கீழ் நின்று நாம் ஆவேசமாகக் கூக்குரலிடலாம். ஆனால் மேடையின் மேல் ரத்தம் வழிய குத்துச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறவனுக்குத்தான் அந்த வலி தெரியும். விளையாட்டில் ஜெயிப்பதல்ல, அவனுடைய உயிர்தான் முக்கியம். விளையாட்டிலிருந்து வெளியேறும் அந்த சுயநலமான முடிவை நோக்கித்தான் அவன் நகர வேண்டும். பார்வையாளர்களைக் குஷிப்படுத்துவதற்காக அடிவாங்கிச் சாக முடியாது. 

எனவே ‘ஓவியா தன் இயல்புத்தன்மையிலிருந்து விலகி விட்டாரே’ என்று பார்வையாளர்கள் தரப்பிலிருந்து குற்றம் சொல்ல நமக்கு அருகதையில்லை. இது குறித்தான முடிவை அவர்தான் எடுக்க முடியும். அந்தச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். 

**
இன்னொரு புறம் இந்தப் பிரச்னையை ஆரவ்வின் நோக்கிலிருந்து பார்த்தால் அவருடைய நிலைமை பரிதாபமாகவே இருக்கிறது. ஒருவேளை அவர் தொடக்கத்திலிருந்தே ஓவியாவிடம் நட்பு முறையில் மட்டுமே பழகியது உண்மையாக இருந்தால், இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருப்பது நிச்சயம் டார்ச்சர்தான். 

ஓவியாவிடம் அவர் விளக்கம் கேட்கும் போதெல்லாம் ‘ இந்த விளையாட்டுக்கு வந்த ரெண்டாவது நாள்லயே..என்ன சொன்னேன்… சொல்லு பார்க்கலாம்.. என்னன்னு தெளிவா சொல்லு’ என்று கேட்கும் முறையில் இருந்தே இது காமிராவில் பதிவாகி இதுகுறித்த தெளிவை மற்றவர்கள் உணர வேண்டும் என்கிற திட்டத்துடன் பேசுகிறார் என்பது தெரிகிறது. தன் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற உத்வேகமாகவும் இருக்கலாம். 

ஜூலி

ஓவியாவை எந்த வகையிலும் புண்படுத்திவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வும் அதே சமயம் தன்னுடைய மதிப்பிற்கு களங்கம் வந்து விடக்கூடாது என்கிற கவனத்திற்கும் இடையில் அவர் தத்தளிக்கிறார் என்பது தெரிகிறது. அவருடைய பக்கம் உண்மை இருக்கிறது என்றால் ஆரவ்வைப் போல ஒரு கனவான் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அத்தனை நிதானமாக இந்தப் பிரச்னையை அணுகுகிறார். இந்த வகையில் ஆரவ் இன்னொரு கணேஷாக மாறிக்கொண்டிருக்கிறார் எனலாம். 

ஆனால் உண்மை அவர் பக்கம்தான் இருக்கிறதா?

**

ஆரவ் – ஓவியாவிற்கு இடையிலான பிரச்னைக்கு இடையே சிநேகன் தூதுவராக இயங்குவது ஒருவகையில் நிம்மதியாக இருக்கிறது. அவரும் இந்தச் சிக்கலை மெள்ள மெள்ள அவிழ்க்கத் தொடங்குகிறார். ஆனால் சமயங்களில் இந்தச் சிக்கலை நீக்குவதுதான் அவருக்கு முக்கியமா, இதை வைத்து தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டி இதைவைத்து குளிர்காய நினைக்கிறாரா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. 

ஓவியாவிற்கு நிகழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் மிக மிக உண்மையானது என்றால் பிக் பாஸ் தலையிட்டு, உளவியல் மருத்துவர் ஒருவரின் சேவையை ஓவியாவிற்கு அளிக்க வேண்டும். அதற்கான சரியான நேரம் இது. அவருடைய தனிப்பட்ட பிரச்னைகளின் மீதாக, அதுசார்ந்த உணர்வுகளைச் சுரண்டி வணிகமாக்குவது அநீதியான செயல். இந்த விளையாட்டைத் தொடர்வதற்கான மனநல தகுதியுடன் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர் இங்கிருப்பது தொடர வேண்டும். பரணியைப் போல ஓவியாவும் சுவரேறிக் குதிக்க முயன்று அந்தக் காட்சிகளையும் டிஆர்பிக்காக அவர்கள் உபயோகப்படுத்துவார்கள் எனில் அது நியாயமேயல்ல. 

**
இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பான சம்பவமும் இல்லாமல் இல்லை. ‘கொஞ்ச நேரம் உன்னைக் கொல்லட்டா.. ஜூலி.. ‘ என்று பயங்கர கடுப்பில் ஓவியா பாட, அதுவரை தனது காந்தியத்தனத்தை பல்லைக் கடித்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஜூலி மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டினார். ஆரவ்விடம் கோபமாகப் புலம்பி விட்டு, அங்கு நடந்ததை மீண்டும் சக்தியிடம் சிரிப்புடன் சொல்லிக் காட்டினார். 

ஓவியா ஆரவ்விற்கு கழுத்து மசாஜ் செய்ய முயன்றதை புகாராகப் புறம் பேசிய காயத்ரி கும்பல், அதே காரியத்தை ஜூலி செய்து கொண்டிருந்தபோது இயல்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆரவ் மீது ஏற்பட்ட கவர்ச்சியை ஜூலி முன்னர் காயத்ரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது நினைவிற்கு வருகிறது. 
சீக்ரெட் பார்முலா என்கிற இழவு காணாமற் போனபோது அதைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது  ‘Perfect-ஆ இருக்கறவங்களைத்தான் நம்ப முடியாது’ என்றார் கணேஷ். பேசியது அவர் மனசாட்சியா?

**
மறுபடியும் ஓவியா பற்றிய பஞ்சாயத்தைக் கூட்டினார் காயத்ரி. அப்போது சிநேகன் சொன்னது அற்புதமான விஷயம். “அவ பிரச்னை பண்ற நேரத்துல மட்டும்தான் சிக்கலா இருக்கு. மத்த நேரத்துல எல்லாம் அவ ஜாலியத்தான் இருக்கா. 

சிநேகன்

ஆனா நாம என்ன பண்றம்னா.. பொழுதன்னிக்கும் ஓவியா.. ஓவியா.. ன்னு அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ‘ஆத்துல இருந்து நான் இறங்கிட்டேன். நீங்க இன்னமும் இறங்கலியா?’ என்கிற ‘வேதம் புதிது’ சிறுவனின் வசனமே நினைவுக்கு வருகிறது. உண்மையில் இதைக் கேட்டவுடன் ‘பளார், பளார்’ என்று தன்னை எவரோ அறைவது போல் திடுக்கிடுகிற சத்யராஜின் உணர்வை காயத்ரியும் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்குமா?

**
நள்ளிரவில் இன்னொரு பஞ்சாயத்து. ‘சாப்பிட்ட தட்டுகளை ஓவியா கழுவ வேண்டும்’ என்று காயத்ரி இன்னொரு இம்சையைக் கூட்ட  ‘டீம் கேப்டன் யாரு.. குக்கிங் டீம்.. வாஷிங் டீம்’ னு எதுவுமே இல்லையே’ என்று ஓவியா லாஜிக் கேள்விகளாக அடுக்க சூடு பிடித்தது. ‘தட்டை கழுவி வெச்சுடும்மா’ என்று சிநேகன்  நிலைமையை சுமுகமாக்க முயல.. ‘நீங்க.. யாரு.. அதைச் சொல்ல.. டீம் கேப்டனா…” என ஓவியா.. ஹெவியாக ஒரு சேம் சைட் கோல் போட்டார். 

நள்ளிரவு நேரம் என்பதால் சிநேகனின் முகபாவத்தை க்ளோசப் காட்சியாக நம்மால் கவனிக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். 

அந்த நாள் முழுதும் ஓவியாவின் சார்பாக பஞ்சாயத்து செய்து விட்டு டயர்டாக உட்கார்ந்திருந்த மனிதர், இந்தத் திடுக்கிடும் வசனத்தைக் கேட்டவுடன்… சிவாஜியின் பாணியில் தழுதழுத்த குரலில்.. ‘யாரைப் பார்த்தும்மா.. அப்படிச் சொன்ன.. தூக்கி வளர்த்த என்னைப் பார்த்தா.. சொன்ன..உனக்கு ஞாபகமிருக்கா.. சின்ன வயசுல மிட்டாய் வாங்கித்தந்தனே.. கைவீசம்மா.. கைவீசு.. என்கிற கணக்காக நிச்சயம் கலங்கியிருப்பார் என்று தோன்றியது. நேரம் முடிந்து விட்டதால் பிக் பாஸ் அதைக் காட்டவில்லை போல. 

**

இன்றைய நாளின் நிகழ்வுகளில், குறிப்பாக ஆரவ் – ஓவியா இடையிலான பிரச்னைகள் அனைத்தும் உண்மையா, அல்லது நாடகமா, பிக் பாஸ் விளையாட்டின் பகுதியா.. என்றெல்லாம் நமக்கு எழுகிற சந்தேக கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை. இப்படியே தொடர்ந்தால் பார்வையாளர்களும் பிக் பாஸ் மனநல விடுதியில் அனுமதிக்கப்படுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இவற்றையெல்லாம் மீறி ஓவியாவின் மீது பரிதாபம் உண்டாவது நிஜம்.  அதைத்தான் உள்ளுணர்வும் உணர்த்துகிறது.

ஆண், பெண் உறவுச்சிக்கலின் வரலாறு மிக நீண்டது. இந்தச் சிக்கலின் மீது எத்தனையோ கதைகளும், நிஜங்களும், இதிகாசங்களும், வரலாறுகளும் நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இதற்கு விடைகாணும் முயற்சியும் சோர்வடையாமல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனித குலம் இருக்கும் வரை இதற்கு விடை கிடைப்பது சிரமம்தான். 

பிக் பாஸ் வீட்டில் இன்று காலை ஒலித்த, போகன் திரைப்பட பாடலில் இருந்த வரிகளின் மூலம் சிறிது தீர்வு கிடைக்கலாம் எனத் தோன்றுகிறது..

காதல் என்பது நேர செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு.
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உலவு.  
(வி)

Part 01



Part 02

காணாத காட்சிகள்



 

Add new comment

Or log in with...