பிக் போஸ் 37 ஆம் நாள்: மனநல வைத்தியசாலையாக மாறும் வீடு

Part 01

Part 02

Part 03

Part 04

Part 05

 

பிக்பாஸ் நிச்சயம் தமிழ் சேட்டிலைட் சேனல் கேளிக்கை எல்லையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதுநாள் வரை கேலி, கிண்டல் கலாட்டாவும் அற்ப ஈகோ கோபமுமாக இருந்தவரை பிரச்னை இல்லை. ஆனால், நேற்றைய 37-ம் நாளின்  நிகழ்வுகள் சற்றே உறுத்தலாக இருக்கிறது. அது என்னவென்று இறுதியில் பார்ப்போம். இப்போது நேற்று என்ன நடந்தது என்று பார்ப்போம்..! 

‘ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும்கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்டபோது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் தொடக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளிகூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியைப் பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

**
காலையில் ஒலித்த பாடலுக்கு ஆரவ், காயத்ரியுடன் இணைந்து ஆடினார். ஓவியாவின் மீது நாமினேஷன் செய்த முதலே அவரிடமிருந்து விலகியிருப்பது தெரிகிறது. பிந்து மாதவியின் நடனமும் அபாரம். 

 பிந்து மாதவியின் நடனம்

பிக் பாஸ் வீட்டில் முட்டை பிரச்னை பெரும்பிரச்னையாக இருக்கிறது. 30 காமிராக்களைக் கொண்டு திருடப்பட்ட வைரத்தைக் கூட கண்டுபிடித்தவர்களால் முட்டை காணாமற் போவதை தடுக்க முடியவில்லை. வையாபுரிதான் இதுகுறித்து எப்போதுமே ஆக்ரோஷமாக இருக்கிறார். கூடி வாழும் தன்மையை வலியுறுத்தும் இந்த விளையாட்டில் பங்கிட்டு உண்பது ஒரு முக்கியமான விஷயம்தான் என்றாலும் ‘முட்டையைத் தின்று விடுகிறான்’ என்று கணேஷின் மீது அடிக்கடி குறைசொல்லிக் கொண்டேயிருப்பது எரிச்சலாக இருக்கிறது. ஒன்று அவரிடம் நேரடியாகப் பேசலாம் அல்லது ‘தின்று விட்டுப் போகட்டும்’ என விடலாம். ‘அதிகம் தின்கிறான்' என்று பரணியையும் இப்படித்தான் புறம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். 

பறவைகள் முட்டையை அடைகாப்பது போல இனி அவரவர்களின் பங்கு முட்டையைத் தலையணைக்கடியில் வைத்துப் படுத்துக் கொள்வதுதான் தீர்வாக இருக்கும் போலிருக்கிறது. 

** 

ஓவியா சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்று இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்ட முயன்றார் காயத்ரி. ஓவியா சமைக்காமல் சோம்பேறியாகவே இருக்கிறாராம். ‘அவர் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்தாரே’ என்று கணேஷ் கூறியும் சமாதானம் ஆகவில்லை. பேசாமல் காயத்ரி சாப்பிடாமல் விரதம் இருப்பதே அவர் ஆரோக்கியத்திற்கும் வீட்டின் அமைதிக்கும் நல்லது எனத் தோன்றுகிறது. 

ஆரவ்வின் கழுத்திற்கு ஓவியா மசாஜ் செய்ததைப் பற்றி இன்னொரு பஞ்சாயத்து. ஒருவரைப் பிடிக்காமல் போய்விட்டால் அவர் செய்வது எதுவுமே பிடிக்காது என்கிற தர்க்கம் மறுபடியும் உண்மையாகிறது. கண்ணனை ஒழிப்பதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற கம்சனின் கதையாகி விட்டது காயத்ரியுடையது. ஓவியாவை எதிலாவது மாட்டி விட வேண்டும் என்பதில் முனைப்பாக‌ இருக்கிறார். 

‘ஆரவ்வை ஓவியா எப்போதும் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறார்’ என்று பெண்கள் பேசிக்கொண்டார்கள். பெண்களின் ஒழுக்கவியலின் மீதாக பெண்களே அதிகம் புறம் பேசிக்கொள்வது மோசமான உலக நடைமுறை. இதனால்தான் அதிகப் பிரச்னைகள் உற்பத்தியாகின்றன. 

ஆரவ்வின் காதல் அடுத்தகட்டத்தை நோக்கி நகருமா என்கிற முக்கியமான பிரச்னையைச் சிந்தித்துக் கொண்டிருந்தார் சிநேகன். ‘ஒருவகையில் ஓவியா genuine ஆக இருக்கிறார்’ என்று சிநேகன் சொல்லியதுதான் அவர் பேசியவையில்  உருப்படியான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். ‘ஆரவ் எது கிடைத்தாலும் விடமாட்டான்’ என்று பெருமூச்சுடன் ஆண்கள் குழு பேசிக் கொண்டிருந்தது. 

**

பிக் பாஸ் ஓர் ஆராய்ச்சி மையமாம். சிலர் தவிர்த்து மற்றவர்களெல்லாம் மனநல நோயாளிகளாம். இப்படியோர் அபத்தமான task. பிக் பாஸ் என்பது அடிப்படையில் ஒரு விளையாட்டு என்றாலும் விளையாட்டிற்கு என்று சில தார்மிகமான எல்லைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ஹாஸ்டலில் புதிதாகச் சேர்ந்த அப்பாவி இளம் மாணவனை, சீனியர் மாணவர்கள் மிகக் குரூரமாகவும் அநாகரிகமாகவும் ராகங் செய்வதற்கு இணையான task இது. 

அதிலும் சிநேகனுக்குத் தரப்பட்டது மோசமான பாத்திரம். பெண்களின் உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் தோரணையிலேயே நடந்து கொள்வாராம். திருநங்கைகளின் வாழ்வியல் வலிகளை, பிரச்னைகளை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தாலாவது இதைப் பாராட்டியிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாக்களில் வருவதைப் போலவே இந்தப் பிரச்னையைக் கிண்டலடித்திருக்கிறார்கள். முற்போக்கு உணர்வுள்ளதாகக் கூறிக் கொள்ளும் சிநேகன் ‘இப்படியொரு பாத்திரத்தை கிண்டலடித்து தன்னால் நடிக்க முடியாது’ என்று பிக் –பாஸிடம் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கலாம். அல்லாவிடில் இவர் என்ன போராளி?

இந்த task-ல் ஒவ்வொருவருக்காகவும் தரப்பட்டிருக்கும் பாத்திரங்களின் தன்மையைக் கவனித்தால் அவரவர்களின் குணாதிசயங்களை, பிரச்னைகளைக் கேலி செய்வது போல கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட அவமானப்படுத்துதல் இது. பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவருமேகூட இது போன்ற கேலிக்கூத்தான போட்டிகளை நாங்கள் விளையாட மாட்டோம் என்று கூறியிருக்கலாம். ஆனால், ஒற்றுமை என்பதே மருந்திற்கும் இல்லாமல் அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே ஒவ்வொரு மூலைக்குள்ளும் கூடிக் கூடி ஒருவரையொருவர் புறம் பேசிக் கொண்டிருக்கும்போது எப்படி ஒற்றுமை வரும்?

சல்லிக் கட்டுப் போராளியாக ஊடகங்களில் புகழ்பெற்று இந்தப் போட்டிக்குள் நுழைந்தவர் ஜூலி என்று அனைவருக்குமே தெரியும். ‘போராளிப் பைத்தியம்’ என்கிற ஒரு அடையாளத்தின் மூலம் இவர்கள் யாரை இலக்காக்குகிறார்கள், கிண்டலடிக்க முனைகிறார்கள்? 

கமல்ஹாசன் ‘hallucination’ என்கிற வார்த்தையை இயல்பாக கூறியதற்காக ‘நான் பைத்தியமாக்கா?’ என்று ஓவென்று கதறி பயங்கரமாக சீன் போட்ட ஜூலி, அதுவே task- ஆகத் தரப்பட்ட போது, அதிலுள்ள கிண்டலின் தீவிரத்தன்மை எதுவுமே புரியாமல் அல்லது புரிந்தாலும் கள்ள மெளனத்துடன் போராளிப் பைத்தியமாகக் கத்திக்கொண்டிருந்தது ஒருபுறம் காமெடி, இன்னொரு புறம் எரிச்சல். ஒரு செவிலியர் என்கிற முறையில் மனநலம் குன்றியவர்களின் நிலையைப் பற்றியும் அது தொடர்பான வார்த்தைகளின் சரியான பொருள் பற்றியும் அவர் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும். அப்படியொரு புரிதலே அவரிடம் இல்லை. 

தம்மை எவராவது சிறிது கிண்டல் செய்து விட்டாலும் கும்பலோடு வந்து விடுகிற காயத்ரியும் சிறிதும் சுயமரியாதை இல்லாமல் பைத்தியமாகக் கத்திக் கொண்டிருந்தது எரிச்சல். ‘சாக்லேட் பவுடருக்கா நான் பொய் சொல்வேனா, வேலை செய்வதற்காக மட்டுமே இந்த வீட்டில் சாப்பிடுகிறேன், இல்லையென்றால் சாப்பிட மாட்டேன்’ என்றெல்லாம் வேடம் போட்ட காயத்ரிக்காவது இந்த விளையாட்டின் அபத்தம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். 

இப்படி சுயமரியாதையே இல்லாம பிக் பாஸின் கட்டளைப்படி எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறவர்களின் மத்தியில் வழக்கம்போல் தனித்தன்மையுடன் இருந்தவர் ஓவியா மட்டுமே. ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த விளையாட்டை தன்னால் தொடர முடியாது என்று பிக் –பாஸிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். இதனால் மற்றவர்களின் luxury budget பாதிக்கப்படும் என்றாலும் என்ன செய்வது? இதற்காகவெல்லாம் பலியாடாக ஆக முடியுமா என்பது அவருடைய வாதம். 

 

இதற்குப் பின்னால் வலியும் வேதனையுமான அவரது உணர்வுகளும் வலிகளும் இருக்கின்றன. பரணி முதலிலேயே தப்பித்துவிட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்குக் காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிகக் குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. 

இப்படிப் பல நாள்களாக அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகளையும் அழுகையையும் சில சமயங்களில் மட்டுமெ வெளிப்படுத்த முடிந்தது. மற்ற சமயங்களில் இதை இயல்பாகவே கடந்தார். மற்றவர்கள் ஒதுக்கி வைத்தாலும் தானே ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதில் இயன்ற அளவிற்கான மகிழ்ச்சியை உருவாக்கிய தேவதை. அதனால்தான் மக்களின் இத்தனை பெரிய அன்பைப் பெற்றிருக்கிறார். 

அந்த வீட்டில் ஓவியாவிற்கு பல சமயங்களில் ஆதரவாக இருந்தது ஆரவ் மட்டுமே. எனவே அன்பிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்கிக் கொண்டிருந்த ஓவியாவிற்கு ஆரவ்மீது அன்பு உண்டானது ஒருவகையில் இயல்பானது. ஆனால் அவர்களுக்கு இடையில் பல சமயங்களில் இணக்கமும் விலகலும் மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஓவியா மீது ஆரவ்விற்கு காதல் இருக்கிறதா இல்லையா என்று மற்றவர்களே குழம்புமளவிற்கு ஆரவ் இந்த விஷயத்தில் சாமர்த்தியமாக நடந்து கொண்டார். ஆனால் எதையும் வெளிப்படையாக அணுகும் ஓவியா, ஆரவ் மீதான காதலையும் வெளிப்படையாகவே தெரிவித்தார். இது போன்ற பெண்கள் எளிதில் அவதூறுகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாவார்கள். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுவே. 

இன்னொரு பக்கம் ஆரவ்வின் தரப்பின் எதிர்பார்ப்பும் சரியாக இருப்பதுபோல் தோன்றுகிறது. தன்னுடைய நிலையை மிகத் தெளிவாகக் கூறியும் ஓவியா தொடர்ந்து தன்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறார், இதனால் என்னுடைய தனிப்பட்ட மதிப்பு பாதிக்கப்படலாம் என்று எண்ணுகிறார். 

ஆனால் இதற்கு அவர் சொல்லும் காரணமும் சந்தேகத்திற்கு இடம் தருவதாய் இருக்கிறது. ‘எல்லார் முன்னாடியும் என் கழுத்தைப் பிடிச்சு மசாஜ் செஞ்சே.’ என்கிறார். இதற்கு என்ன பொருள்? தனியான சந்தர்ப்பத்தில் இதைச் செய்தால் சரி என்பதா? காமிராக்களும் மனிதர்களும் இல்லாத தனிமையான சூழலாக இருந்தாலும் ஆரவ் இதே போன்றதொரு நேர்மையுடன் நடந்து கொள்வாரா? தெரியவில்லை.

இது சங்கடமான விஷயம். குழப்பமானதும் கூட. ஆண் x பெண் சிக்கல்களுக்கான வயது என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்தது. 

‘ஓவியா செய்வது போலவே, இந்த வீட்டில் ஓர் ஆண், ஒரு போட்டியாளரைத் தொடந்துகொண்டும் தொட்டுக்கொண்டும் இருந்தால் அது இதேபோல் பார்க்கப்படுமா?’ ரைசா எழுப்பும் கேள்வியும் கவனிக்கத்தக்கது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்களைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் சிநேகனை நாம் எப்படியெல்லாம் கிண்டடிலத்திருக்கிறோம்? ஒருவேளை அந்த ஆறுதலில் சில சதவிகிதமாவது உண்மை இருந்திருக்கலாமே?

எனவே, இந்த நோக்கில் ஓவியாவின் செயற்பாடுகள் அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. அவர் தன் மன அழுத்தத்தை உணர்ந்தால் அது குறித்து பிக் பாஸிடம் முறையிடலாம். அல்லது வேறு வழியில்லாமல் காயத்ரி கும்பலுடன் இணக்கமாக முயலலாம். புதிதாக வந்திருக்கிற பிந்து மாதவியுடன் இறுக்கமான நட்பை ஏற்படுத்திக்கொள்வதின் மூலம்கூட தன் சிக்கல்களைக் கடக்கலாம். 

ஆனால், எந்தவொரு சூழலிலும் போலித்தனமாக நடிக்காமல் தன் மனசாட்சிற்கு ஏற்றபடி உண்மையாகவே இருக்க முயலும் ஓவியாவின் குணாதிசயம் கவர்கிறது. ஆனால் இது மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது. 

இந்த விஷயத்தை இப்போது காயத்ரி பஞ்சாயத்திற்கு எடுத்திருக்கிறார். ‘ஓவியா தனிமைப்பட்டிருப்பதால்தான் இவ்வாறெல்லாம் செய்கிறார். இனி நாங்கள் அவரை எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். அவர் தவறு செய்தால் கூட பொறுத்துக் கொள்கிறோம்’ என்கிறார். உண்மையாகவே நல்லெண்ணத்துடன் இதை அவர் செய்கிறாரா, அல்லது இதன் மூலம் தன்னுடைய பிம்பம் நேர்மறையான பொருளில் அழுத்தமாகும் என்கிற தந்திரமா என்று தெரியவில்லை. 

இந்தச் சிக்கலிலிருந்து ஆரவ்வை விடுவிக்கிற அளவிற்கு நல்லியல்பு கொண்டவரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 

**

ஓவியாவின் செயற்பாடுகள், அவருடைய குழப்பமான நடவடிக்கைகள், உணர்ச்சி மாறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் மனஅழுத்தங்களிலும் சிக்கல்களிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. அவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மதிப்பு சட்டென்று கீழிறங்கும் என்பதாலேயே அவர் task செய்ய மறுத்தபோதுகூட பிக் பாஸால் எதுவும் செய்யமுடியவில்லை. 
இந்த விளையாட்டில் ஓவியா ஜெயிப்பாரா என்பதெல்லாம் கூட முக்கியமில்லை. ஓவியாவிற்கு அவரேதான் முக்கியம். இந்த விளையாட்டோ இதில் கிடைக்கும் வெற்றியோகூட மூன்றாம் பட்சம். இது சார்ந்த புரிதலை நோக்கி நகர்வாரா என்பதே இப்போதைய கவலை. 

இயக்குநர் ருத்ரைய்யா இயக்கத்தில் ‘அவள் அப்படித்தான்’ என்கிற திரைப்படம் வந்தது. ஆண்களின் தொடர்ந்த துரோகத்தால் அவர்களின் மீது வெறுப்புற்று, கோபத்தை முகமூடியாக்கிக் கொள்ளும் ஒரு பெண் பாத்திரம். ‘மஞ்சு’ என்கிற அந்தப் பாத்திரத்தை நடிகை ஸ்ரீபிரியா திறமையாகக் கையாண்டிருந்தார். 
ஆணாதிக்க உலகில் எவரையும் நம்ப முடியாமலிருக்கும் மஞ்சு, உண்மையான அன்புடன் அணுகும்போதுகூட தன் அலட்சியத்தால் அவரைப் புறக்கணிப்பார். அவரின் அன்பை உணரும் காலகட்டம் வரும்போது காலம் கடந்திருக்கும். 

ஓவியா இன்னொரு மஞ்சுவாக ஆகிவிடக்கூடாது.
** 

இப்போது பிக் பாஸ் மீதான ஆதங்கத்துக்கு வருவோம்..!

நேற்றைய நாளின் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். மனநலம் குன்றியவர்களை வேடிக்கைப் பொருளாக்கி விளையாட்டுப் போட்டி நடத்துவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல குரூரமானதும் கூட. நுண்ணுணர்வு என்பது அறவே இல்லாதவர்கள்தான் இதை விளையாட்டாகப் பார்க்க முடியும். நேற்றைய பகுதிக்கான சமூகவலைதள விமர்சனங்களும் பிக் பாஸ் அணியினர் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதாகவே இருந்தது! 

மனநலம் குன்றியவர்கள்ஒருவர் மனநலம் குன்றியிருப்பது என்பது நிச்சயம் வேடிக்கையானதல்ல. அப்படிப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிப் பாருங்கள். அந்தச் சூழலால் அவர்களே பாதி மனஉளைச்சலை அடைந்திருப்பார்கள். தங்களின் அன்பு உறவுகளை அம்மாதிரியான நிலையில் பார்ப்பதும் பராமரிப்பதும் எத்தனை கடினமானது என்று நடைமுறையில் பார்த்தால்தான் தெரியும். மனச்சிக்கல் என்பது கருணையோடு அணுகப்பட வேண்டிய விஷயம். பொதுப்புத்தியோடு எள்ளி நகையாட‌  வேண்டிய விஷயமல்ல. 

என்னுடைய உளவியல் வகுப்பின் முதல் நாளில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார் ‘யாரெல்லாம் இங்கு நார்மலான மனிதர்கள்? கை தூக்குங்கள்’. தங்களை அப்நார்மல் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டவர்கள் கைதூக்கினார்கள். கேள்வியின் பொருள் பொதிந்து சிலர் கைதூக்காமல் இருந்தார்கள். கேள்வி புரியாமல் சிலர் அமைதியாக இருந்தார்கள். 

இந்தக் குறும்பு முடிந்ததும் ஆசிரியர் சொன்னார் ‘இந்த உலகில் நார்மலானவர்கள் என்று எவருமே கிடையாது” ஏனெனில் எது சரி என்று எவர் தீர்மானிக்க முடியும்? இந்த உலகம் வகுத்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களை இயல்பானவர்கள் என்றும் அதிலிருந்து மீறி நடக்கிறவர்களை ‘ஒருமாதிரி’ என்றும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மனநலம் குன்றியவர் என்று நம்மால் கருதப்படும் ஒருவரின் பார்வையில் நாம்தான் பைத்தியக்காரர்கள். 

இயல்பானவர்களாகக் கருதிக் கொண்டிருக்கும் நாமே பல சமயங்களில் இயல்புத்தன்மைக்கு மாறாக விநோதமாக நடந்து கொண்டிருக்கிறோம். எனில் இயல்பு என்பதுதான் என்ன?

இந்தக் கேள்விக்கான பதிலை பிக் பாஸே யோசிக்கட்டும். ஏனெனில், மனதின் ரசனை வீரியத்தை எதிர்மறை திசைக்கு இழுத்துச் செல்லும் நடைமுறைகளை அனுமதிக்கலாமா என்று பிக்பாஸ் மட்டுமல்ல...நாம் அனைவருமே சற்று நிதானமாக யோசிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமான விஷயம் இது! (வி)

 


Add new comment

Or log in with...