நானுஓயா கோர விபத்து: வேனில் பயணித்த 6 பேர் உள்ளிட்ட 7 பேர் பலி

- மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை
- உரிய உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுற்றுலாவுக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 47 பேரை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த வேன்  ஒன்றும் மேலும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் முச்சக்கர வண்டியின் சாரதியுமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக நானுஒயா பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கோர விபத்து சம்பவம் இன்று (20) மாலை 7.00 மணியலவில் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் டீ சென்டருக்கு அருகில்  இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா திசையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியால், அதன் கட்டுப்படுத்த முடியாத நிலையில், எதிர்த் திசையில் இருந்து வந்த வேன் மற்றும் முச்சக்கரவண்டயுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த 7 பஸ்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேனுடனும், முச்சக்கர வண்டியுடனும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது  வேன் மிக மோசமாக நசுங்கிய நிலையில் அதில் பயணித்தோரில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுதாகவும், முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதியும் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களில் 13 வயது சிறுவன் ஒருவரும், 26, 27 வயதுகளுடைய 3 ஆண்கள் ஆகிய 4 ஆண்கள், 08, 12 வயதுகளுடைய 2 சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் நானுஓயா மற்றும் ஹட்டன் பிரதேசங்களைச் சேர்நதவர்களாவர்.

அதேநேரம் சுற்றுலா வந்த பஸ் சுமார் 150 அடி தூரம் தேயிலை மலைக்குள் கட்டுப்பாட்டை இழந்து செல்லப்பட்டுள்ளது. ஆயினும் அதிர்ஷடவசமாக பஸ் புரளவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பஸ்ஸில் பயணித்த 41 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 3 பெற்றோர் உள்ளிட்ட சுமார் 60 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தேவையேற்படின் விமானம் மூலம் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ரமேஷ் ஆறுமுகம்


Add new comment

Or log in with...