மருத்துவ, பொறியியல் துறைகளுக்கு தெரிவான காரைதீவு மாணவர்களுக்கு பாராட்டு விழா

 கல்முனை றோட்டரி கழகம் வழங்கிய கௌரவம்

காரைதீவில் கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த ஆறு மாணவர்கள் கல்முனை றோட்டரி கழகத்தால் பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது தலைவராக றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்விலேயே இக்கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினது பதவியேற்பு வைபவம் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(27) நடைபெற்றது. பிரதம அதிதியான றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் புவுது டி சொய்சா மற்றும் கௌரவ அதிதியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்ஆகியோர் இக்கௌரவத்தை வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது, இவ்வருடம் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்ற காரைதீவைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் முதலில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவிகளான சகாதேவராஜா டிவானுஜா,லோகநாதன் புவித்ரா, தங்கவடிவேல் டயானு, ராஜேஸ்வரன் கம்ஷாயினி ஆகிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்..

அதனைத் தொடர்ந்து ரஜிநாதன் துர்க்கா பொறியியல் துறைக்கு தெரிவாகியிருந்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...