கிழக்கில் 16-20 வயதுக்குட்பட்டோரில் 95 வீதமானோருக்கு பைஸர் தடுப்பூசி

கிழக்கு மாகாணத்தில் 16_-20வயதுக்குட்பட்ட 95வீதமானவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று 03மாதங்கள் பூர்த்தியைடைந்த 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 03வது தடுப்பூசியாக பைஸசர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வைத்தியசாலைகள், சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் மற்றும் தடுப்பு மருந்து வழங்கும் மையங்களுக்குச் சென்று 03வது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறைவடைந்திருந்த கொவிட்- தொற்றாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாத நிலை தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாதாந்தம் செய்யப்படும் அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனையில் காணப்படும் நோயாளர்களின் வீதத்தை ஒப்பீடு செய்யும் போது மீண்டும் 31வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இம் மாத இறுதிக்குள் மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் உட்பட எமது நாட்டிலும் ஒமிக்ரோன் பிரள்வு வகை கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடியது என கூறப்பட்ட போதிலும் இதன் பாதிப்பு பற்றிய சரியான கணீப்பீடுகள் கூறப்படவில்லை.

பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் வலுக்கட்டாயமாக கையாளுவது மிக அவசியமானது. எதிர்வரும் காலங்களில் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள் வருகின்றமையினால் தமக்குத் தேவைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். பொது மக்கள் தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், இதனை மீறுபவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)