உயிர்ப் பாதுகாப்பில் அக்கறை கொள்வது அனைவரதும் பொறுப்பு

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் இடம்பெற்றுள்ள அகால மரணங்கள் அதிர்ச்சியும், கவலையும் தருகின்றன. இருபத்து நான்கு மணி நேரத்தில் மாத்திரம் வீதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றுக் காலை வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவலொன்று தெரிவித்தது.

அதேசமயம் பதுளை மாவட்டத்தில் உள்ள அல்துமுல்ல என்று இடத்தில் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டத்துக்காக சென்றிருந்த வேளையில், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் மூவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். புத்தாண்டு காலப் பகுதியில் இடிமின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி வன்னி பகுதியில் மூவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவை அனைத்துமே புத்தாண்டு காலத்தில் சற்றேனும் எதிர்பார்க்காத விதத்தில் சம்பவித்துள்ள அநியாய உயிரிழப்புகள் ஆகும். வாகன விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய மரணங்களுக்கெல்லாம் காரணம் உயிர் மீதான அச்சமின்மையும், அலட்சியமும் ஆகும். அதேசமயம் இடிமின்னல் வேளையில் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் நடந்து கொண்டால் உயிராபத்தை பெருமளவில் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வீதிகளில் இடம்பெறுகின்ற வாகன விபத்துகளால்தான் நாட்டில் இப்போது கூடுதலான மரணங்கள் சம்பவிக்கின்றன. ஒரு வருட காலத்துக்கு முன்னர் வீதி விபத்துகளால் தினமும் சம்பவிக்கின்ற உயிரிழப்புகளின் எண்ணிக்ைக 7 ஆக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தினமும் இப்போது சுமார் 9 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளைத் தவிர படுகாயமடைவோரின் எண்ணிக்ைகயும் அதிகரித்தபடியே செல்கின்றது.

இலங்கையில் கடந்த வருடம் தமிழ்_சிங்களப் புத்தாண்டை மக்கள் கொண்டாடவில்லை. கடந்த வருடம் கொவிட்19 அலை தலைதூக்கியிருந்ததால் மக்கள் தத்தமது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். இவ்வருட சித்திரைப் புத்தாண்டின் போது கொவிட் அலை பெருமளவில் தணிந்து விட்டதனால் புதுவருடத்தை மக்கள் விமரிசையாகக் கொண்டாடுவரென பொதுவாகவே எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை புத்தாண்டை கொரோனா அச்சுறுத்தல் கருதி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தபடி அமைதியான முறையில் கொண்டாடுமாறு மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் இருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாடெங்கும் ஏற்கனவே வீதிவிபத்துகள் அதிகரித்திருப்பதனால் புத்தாண்டு காலத்தில் வீதிப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களின் சாரதிகளை மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்தி இருந்தனர். ஏனெனில் நாட்டில் இவ்வாறான பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துகளும், அதனால் சம்பவிக்கின்ற மரணங்களும் அதிகரிப்பது வழமை ஆகும்.

எவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்ற போதிலும் வாகன விபத்துகள் சற்றும் குறையவே இல்லை. சித்திரைப் பண்டிகை கொண்டாடப்படுகின்ற இந்நாட்களில் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் விதிவிபத்துகள் அதிகரித்தே காணப்பட்டன. கடந்த காலத்தை விட இவ்வருடம் உயிரிழப்புகளும் அதிகமாகும்.

வாகன விபத்துகளை எடுத்துக் கொள்வோமானால் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகமாக இடம்பெற்றுள்ளன. சிதறுண்டு போய்க் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள், படுகாயமடைந்த நிலையிலான உயிரற்ற உடல்கள் போன்றவை தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்ற போது வீதி விபத்துகளின் அகோரம் புரிகின்றது. வாகன விபத்துக் காட்சிகளும், உயிரிழப்புத் தகவல்களும் கவலை தருகின்றன.

உயிரிழப்போரில் கூடுதலானவர்கள் இளைஞர்களென்பது தெரிந்த விடயம். விபத்தின் தன்மையைப் பார்க்கின்ற போது, கட்டுப்படுத்த முடியாத அதிகரித்த வேகமே இதற்கெல்லாம் காரணமென்பது நன்கு தெரிகின்றது. இளவயது துடிப்பும், வேகமுமே உயிரிழப்புக்கான காரணங்களாக அமைந்துள்ளன. அதுவும் வாகனமோட்டிகளில் பலர் மதுபோதையில் வாகனம் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவது விபத்தைக் கொண்டு வருமென்ற அறிவுறுத்தல் எப்போதும் வழங்கப்பட்டே வருகின்றது. ஆனாலும் மதுபானம் அருந்தி விட்டு வாகனம் செலுத்துவோர் அக்குற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டபடியே வருகின்றனர். போக்குவரத்துப் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் எண்ணமே தவிர, வாகன விபத்தினால் தனது உயிருக்கும், மற்றையோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமென்ற சிந்தனை அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் செலுத்துவோர் தங்களது உயிருக்கு மாத்திரமன்றி மற்றையோரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனரென்பதை மறந்து விடலாகாது. அதுமட்டுமன்றி, தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற அக்கறை ஒவ்வொருவருக்கும் எந்நேரமும் இருப்பது அவசியம். அலட்சியப் போக்கு உள்ளவர்களின் உயிரை பொலிசார்தான் வந்து காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் தவறானது.

நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்துவதென்பது முடியாத காரியம். ஆனால் ஆபத்து நேரும் போது பொலிசாரை பாதுகாப்புக்கு அழைப்பது அவசியம். முதலில் ஒவ்வொருவருக்கும் தத்தமது உயிர் மீதான அக்கறை அவசியம். இடிமின்னல் தாக்கம், நீரில் மூழ்குதல், வீதிவிபத்துகள் போன்ற ஒவ்வொன்றுமே விபத்துகளாகும். அவற்றில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்து விடலாகாது.


Add new comment

Or log in with...