வட கொரியாவிலிருந்து நடந்தே நாடு திரும்பிய ரஷ்ய நாட்டவர்

கடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்ய இராஜதந்திரக் குழுவினர் ரயில் தள்ளுவண்டியை கைகளால் தள்ளிக்கொண்டே நடைபாதையாக வட கொரியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறாக இந்த எட்டுப் பேரும் ரயில் மற்றும் பஸ்களில் பயணித்து பின்னர் தள்ளுவண்டியை தள்ளியபடி 1 கிலோமீற்றர் தூரம் ரயில் தண்டவாளத்தின் ஊடே வட கொரியாவில் இருந்து ரஷ்ய எல்லையை அடைந்துள்ளனர்.

வைரஸ் பரவல் காரணமாக வட கொரியாவில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும் நாட்டில் எந்த கொரோனா தொற்று சம்பவமும் இல்லை என்றே வட கொரியா கூறி வருகிறது. இது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் ரயில்கள் மற்றும் பார வண்டிகள் நாட்டுக்குள் வருவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வட கொரியா தடை விதித்துள்ளது. பெரும்பாலான சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை உள்ளது.

இந்நிலையில் மாற்று வழி இல்லாத சூழலிலேயே ரஷ்ய இராஜதந்திரிகள் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

‘ஓர் ஆண்டுக்கு மேலாக எல்லைகள் மூடப்பட்டு பயணிகள் போக்குவரத்து தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வீடு திரும்புவதற்கு நீண்ட மற்றும் கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...