ஒரு வாரகாலமாக முடக்கப்பட்ட நிலையில் கல்முனை பிரதேசம்

கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் ஒரு வார காலமாகத் தொடருகின்ற தனிமைப்படுத்தல் நிலைமையினால் இப்பிரதேசத்தின் 11 கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (28) தொடக்கம் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடிவீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் இங்குள்ள பொதுச்சந்தை, கடைகள், பள்ளிவாசல்கள், பொதுநிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. உள்ளூர் வீதிகளும் வீதித் தடைகள் போடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இது விடயமாக சுகாதாரத் துறையினர் குறிப்பிடும் போது, தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுமாக இருந்தால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் அனுதியோடு கல்முனை மாநகரத்தின் சகல பகுதிகளையும் முடக்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் முக்கிய அறிவித்தல் ஒன்றும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இப்பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , சுகாதாரத் துறையின் பிரதிநிதிகள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கல்முனை கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி அமைக்கப்பட்டுள்ளது .

இச்செயலணியினால் 02.01.2021 சனிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்டுள்ள கல்முனை செயிலான் வீதி தொடக்கம் இதுவரை முடக்கப்படாதுள்ள சாஹிறா கல்லூரி வீதி வரையிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படல் வேண்டும்.

இப்பிரதேசத்தில் தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படுகின்றது . அவசர வைத்தியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள்.

இப்பிரதேசத்தில் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் வைத்தியசாலைகளும் மருந்தகங்களும் மட்டுமே திறக்கப்பட அனுமதியளிக்கப்படும்.

எல்லா நேரங்களிலும் சுகாதாரத் துறையினரினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும்.

இவ்வறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரத் துறையினரின் பங்களிப்புடன் உடனடியாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் மூடப்பட்டிருக்கும் செயிலான் வீதி வரையிலான பகுதிகளை விரைவாக மீட்பதற்காகவும், ஏனைய பகுதிகள் ‘லொக் டவுன்’ செய்யப்படாமல் பாதுகாப்பதற்காகவுமே என்பதனால் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.அஷ்ரப்கான்
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...