ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மீது நம்பிக்கை கொண்டுள்ள சங்கா, மஹேல

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி இன்று 26ஆம் திகதி கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சிறந்த போட்டியைக் கொடுக்கும் என்று தான் நம்புவமாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடர் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் ஆரம்பமாக உள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், அணிகளும் தமது இறுதி தயார்படுத்தல்களில் உள்ளன.

கண்டி டஸ்கர்ஸ், கோல் க்ளேடியேட்டர்ஸ், தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய 5 அணிகளை உள்ளடக்கியதாக இந்த தொடர் இடம்பெறவுள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இத்தொடருக்கான தமது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளனர்.

அங்குரார்ப்பண எல்பிஎல் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, ”லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அணிகள் மற்றும் வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், திறன், மகிழ்ச்சி மற்றும் நேர்மையையும் வெளிப்படுத்துங்கள். குறிப்பாக, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு இந்த தொடர் சிறப்புவாய்ந்ததாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தனவும், தான் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மஹேல தனது டுவிட்டர் பதிவில், ”குமார் சங்கக்காரவை போன்று நானும், கிரிக்கெட்டை புதிதாக ஆரம்பிக்கும் யாழ் நகரத்தை பிரதிபலிக்கும் அணியான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...