கொரோனா விடயத்தில் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தலைதூக்குவதற்கு, மக்களின் அலட்சியமே கூடுதலான காரணமாக இருந்துள்ளது என்பது உண்மை. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சவேந்திர சில்வா சில தினங்களுக்கு முன்னர் எமக்கு வழங்கியிருந்த நேர்முகம் ஒன்றின் போதும் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தணிந்து போனதையடுத்து, எமது மக்களில் பலருக்கு கொரோனா பற்றிய அச்சமும் விழிப்புணர்வும் முற்றாகவே நீங்கி இருந்தன. இலங்கையில் இருந்து கொரோனா தொற்று முற்றாகவே ஒழிக்கப்பட்டு விட்டதாகவே பலர் நம்பிக் கொண்டார்கள். மக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வு தொடர்ந்தும் பேணப்பட்டிருக்குமானால், மீண்டுமொரு அலை உருவாகியிருப்பதற்கே வாய்ப்பில்லை என்பதுதான் இராணுவத் தளபதியின் கருத்தாக இருந்தது.

இலங்கையில் இவ்வருட மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கொரோனா தொற்றின் முதலாவது அலை உருவெடுத்த வேளையில் நாட்டு மக்கள் உண்மையிலேயே அச்சமும், விழிப்புணர்வும் அடைந்தார்கள். கொரோனா தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதாரப் பழக்கவழக்கங்களை முழுமையாகக் கடைப்பிடித்தார்கள். ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், பொறுமையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆனால் காலப் போக்கில் எமது மக்களில் கூடுதலானவர்கள் விழிப்புணர்வையே மறந்து போனார்களென்பதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிந்தது. சமூக இடைவெளியை மறந்து போனார்கள்; முகக்கவசத்தை தாடை வரை இறக்கி விட்டபடி வீதிகளில் திரிந்தனர்; கைகளை சுத்தமாக வைத்திருப்பதையும் மறந்தார்கள். இலங்கையை விட்டு கொரோனா முற்றாக நீங்கி விட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டார்கள்.

சாதாரண மக்கள் மாத்திரமன்றி அரசியல்வாதிகள் பலரும், பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரிகளில் ஏராளமானோரும் இவ்வாறு அலட்சியமாகவே பொது இடங்களில் தோன்றினார்கள். இந்நிலையில் சாதாரண மக்களும் காலப்போக்கில் விழிப்புணர்வை மறந்து போனார்கள். இதன் காரணமாக எமது நாடு தற்போது கொரோனாவின் மூன்றாவது அலைக்கு முகம் கொடுத்துள்ளது.

திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே, மூனறாவது அலைத் தாக்கம் வேகமாக பல இடங்களிலும் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்தான் மூன்றாவது அலையின் முதலாவது தொற்றாளரா என்பது கூட இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

இதனை சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகக் கண்டறிவதென்பது இலகுவான காரியமல்ல. கொரோனா வைரஸானது இலகுவாகவும் வேகமாகவும் ஒருவரில் இருந்து மற்றையோருக்கு தொடர்சங்கிலியாக பரவிச் செல்லும் பண்பைக் கொண்டுள்ளதனால், கிருமித் தொற்றின் ஆரம்பத்தைக் கண்டறிவதென்பது இயலாத காரியமாகக் கூடப் போகலாம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டியதே தற்போது எம்மத்தியில் உள்ள முதலாவது பொறுப்பாகும்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் இரு விடயங்கள் பிரதானமானவையாகும். முதலாவது, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தம்மிடமுள்ள வைரஸ் மற்றையோருக்குப் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். இதற்காகவே சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

மற்றைய முக்கியமான விடயமானது, சுகதேசியான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று தன்னை நெருங்க விடாமல், தன்னை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்வதாகும். இவ்வாறு பாதுகாப்புப் பெறுவதற்கான முழுமையான ஆலோசனைகள் ஊடகங்கள் வாயிலாக தினமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்த வரை நாம் ஒவ்வொருவரும் முக்கியமான விடயமொன்றை மனதில் நிலைநிறுத்திக் கொள்வது அவசியமாகும். இந்தத் தொற்றில் இருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது எத்தனை அவசியமோ, அது போன்று தன்னைச் சூழவுள்ள மற்றையோரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சமூகப் பொறுப்பை அவர் கொண்டிருக்கிறார். ஏனெனில் சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கினாலேயே நம் ஒவ்வொருவருக்கும் முழுமையான பாதுகாப்புக் கிடைக்கின்றதென்பதை ஒருபோதும் மறந்து விடலாகாது.

கொவிட்-19 வைரஸ் ஆதிக்கமானது மனித சமுதாயத்தையே இன்று முடக்கி வைத்துள்ளது. நாம் அலட்சியமாக இருப்போமானால் கொரோனாவிடம் தோற்றுப் போவோம். விழிப்புணர்வை வைராக்கியமாகக் கொள்வோமானால் கொரோனா எம்மிடம் தோற்றுப் போய் விடும். இதுவே மருத்துவ உலகம் கூறுகின்ற யதார்த்தம்.


Add new comment

Or log in with...