குழந்தைகளை பாராட்டுங்கள்

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவர்களது சிறிய சிறிய நல்ல செயல்களை கூட பாராட்டுங்கள், அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், அது அவர்களுக்கான அங்கீகாரமாகையால் அவர்களது உள்ளத்தில் மன நிறைவை, மகிழ்ச்சியை உண்டாக்கும், நல்லவைகளை தொடர்ந்தும் செய்ய ஊக்குவிக்கும்.

வாழ்த்துக்கள் கூறுவது, பாராட்டுவது, அடுத்தவர் திறமைகளை, நற் செயல்களை அங்கீகரிப்பது சிறியோர் மீது அன்பும், பெரியவர்கள் மீது மரியாதையும் காட்டுகின்ற உயர்ந்த பண்பாடாகும்.

அவ்வாறான நல்ல பண்பாடுகளை முந்திக் கொண்டு அமுல் செய்வோருக்கு இரட்டிப்பு நன்மைகள் இருக்கின்றன. மற்றொருவர் செய்தால் நாமும் செய்வோம் என்று பிரதியுபகாரம் செய்ய காத்திருப்போர் சுயநலமிகள்.

ஒருவருக்கு நன்றி கூறுகின்ற பொழுது, அவரை பாராட்டுகின்ற பொழுது அவரது மன அழுத்தம், கவலைகள், நம்பிக்கையீனங்கள், விரக்திகள் கூட பறந்து போய்விடுகின்றன, அவர்களது உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.

மனிதர்களிற்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என இஸ்லாம் எங்களுக்கு கற்றுத் தருகின்றது.

இன்று தாம் செய்யாதவற்றிக்காக பாராட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கும், அடுத்தவர் திறமைகளை, அர்பணங்களை, அங்கீகாரங்களை தமதாக்கிக் கொள்வதற்கும் பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களும் பகல் கொள்ளைக் காரர்கள் தான்.

அன்பு, சமாதானம், மன அமைதி, நிம்மதி, சந்தோஷம் என்பவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் உலகில் ஒரு விசுவாசி அடுத்தவரை சந்திக்கின்ற பொழுதே “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும்” உண்டாவதாக என்ற உயரிய பிரகடனத்தை செய்துகொள்கிறார்.

அத்தகைய பண்புகளே உலகில் நேரிடையான சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருக்கின்றன, அதனால் தான் ஒரு சகோதரனை முகமலர்ச்சியுடன் பார்ப்பது கூட

ஸதகா என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அடுத்தவர் அகத்திலும் முகத்திலும் மலர்ச்சியை கொண்டுவருவது உங்கள் நல்ல குணாதிசயங்களின் பண்பாடுகளின் பிரதிபலிப்பாகையால் அதற்கு நற்கூலியுண்டு, நீங்களும் நேசிக்கப் படுவீர்கள்.

இன்று போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகில் மனிதன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் இலாப நஷ்டக் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அபூ அப்துல்லாஹ்,
மாத்தறை


Add new comment

Or log in with...