உடல் பருமன் சிறார்களுக்கு உபாதை

இன்றைய காலகட்டத்தில் எல்லா வகையான வசதிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதற்கும் பெரும் பங்களிப்பு நல்குகின்றது. இதன் விளைவாக இன்றைய குழந்தைகளது செயல்பாடுகள் குறைவடைந்து வருகிறது. எல்லாவற்றிலும் நவீன வசதிகள் வந்துள்ளதால் அவற்றைப் பயன்படுத்தவே அவர்களும் விரும்புகின்றனர். இதனால் உடல் இயக்கமும் குறைந்துள்ளது.  

இதன் கதாரணத்தினால் உண்ணும் உணவு வகைகளின் ஊடாக உடலில் சேரும் கலோரிகள் உடலில் அப்படியே இருக்கின்றது. அவை சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து செல்ல வழிவகுக்கின்றது-. ஆனால் எந்த அளவுக்கு உணவில் கலோரிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றதோ அந்த அளவுக்கு உடல் உழைப்பும் அவசியம். இருந்தும் தற்போதுள்ள பெரும்பாலான சிறுவர்களிடம் இது இல்லை. முன்பெல்லாம் பெற்றோர் சிறுவர்களிடம் வேலைவாங்குவர். ஆனால் இன்று சிறுவர்கள் பெற்றோரிடம் வேலைவாங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.  

அதேநேரம், நொறுக்குத்தீனியும் உடனடி உணவு வகைகளும் உடல் எடை அதிகரிக்க உதவும் மற்றொரு காரணியாக அமைகின்றது. பொதுவாக சிறுவர்கள் உணவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளாக இருப்பது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. பெற்றோரும் பிள்ளைகள் விரும்புகின்றனர் என்பதற்காக அவற்றையே வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர். இது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.  

குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிள்ளைகளுக்கு விரைவு உணவு வகைகளே சமைத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவ்வகை உணவுகள் உடல் எடை அதிகரிக்கத் துணைபுரிவதுடன் பல நோய்களுக்கும் காரணமாகி விடுகின்றன. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதன் விளைவாக ஒரு குழந்தைக்கு இதய நோய் ஏற்படுவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது. அத்தோடு படிப்பில் ஆர்வம் குறைதல், கவனச்சிதறல், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமின்மை போன்றவாறானவையும் கூட ஏற்படலாம். உடல் பருமனாகும்போது அந்த எடையை எலும்புகள் தாங்க முடியாமல் எலும்பு சம்பந்தப்பட்ட உபாதைகளும் ஏற்படலாம். இதுபோன்ற பலவிதமான பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் முகம் கொடுக்கலாம்.  

மாடிப்படிகள் ஏறுவது மிக முக்கியமான உடற்பயிற்சி தான். ஆனால், இப்போதுள்ள பெரும்பாலான சிறுவர்கள் பாரம்தூக்கியை மாத்திரம் தான் உபயோகிக்கின்றனர். என்றாலும் சிறுவர்கள் மாடிப்படிகள் ஏறி இறங்குவதைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அத்தோடு அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் எந்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அனுமதிக்க கூடாது.சிறுவர்களை விளையாட்டுகளில் ஊக்குவிக்க வேண்டும். அது உடல் பருமன் ஏற்படுவதைத் தவிர்க்கப் பெரிதும் உதவும்.  

இதேவேளை சில சிறுவர்கள் பரம்பரை காரணமாக உடல் பருமன் மிக்கவர்களாக இருப்பர். அவர்களது உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சீர்செய்வதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். குறிப்பாக சிறுவர்களுக்கு விரைவு மற்றும் நொறுக்குத்தீனி உணவு வகைகளை வழங்குவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மரக்கறி வகைகளையும் தானியங்களையும் ஒழுங்குமுறையாக உண்ணக் கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் ஆரோக்கியமாக வளருவர். அவற்றை அவர்கள் விரும்பி உண்ணும் வகையில் சமைத்துத் வழங்குவது பெற்றோரின் திறமையில் தான் தங்கியுள்ளது.

அதனால் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற மரக்கறிகளும் பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை மறந்துவிடலாகாது.   மேலும் உடல் பருமன் கொண்ட சிறுவர்களை எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கலாம். ஏனெனில் உடல் பருமனானது பெரியவர்களை மாத்திரமல்லாமல் சிறுவர்களையும் கூட பாதிக்கக்கூடியதாகும்.  

ஆகவே, இது தொடர்பிலான விழிப்புணர்வு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெரிதும் உதவும். இது மறைக்க முடியாத உண்மையாகும். 


Add new comment

Or log in with...