இலங்கை மீது ஐ.நா. அழுத்தம்

2002ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இரண்டு தரப்பினராலும் இழைக்கப்பட்ட கொடூரமான மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விசேட கலப்பு நீதிமன்றமொன்றை (establishment of a hybrid special court, integrating international judges, prosecutors, lawyers and investigators) அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹசைன் நேற்றையதினம் வெளியிட்ட இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் 261 பக்கங்களைக் கொண்டதாக இலங்கை தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்று முன்னணி சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் கீழ் ஏழு விசாரணையாளர்கள் இந்த விசாரணையை நடத்தியிருந்தனர். இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று ஜெனீவாவில் வெளியிட்டு வைத்ததுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினார்.

“எமது விசாரணை இலங்கையில் நடைபெற்ற குரூரமான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதாவது பாகுபாடற்ற எறிகணைத் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், காணாமல் போதல்கள், மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றங்களை வெளிக்கொணர்ந்துள்ளது” என ஹ¥சைன் தெரிவித்தார்.

இந்த அறிக்கையினூடாக வெளிக் கொணரப்பட்ட மீறல்கள் முழு சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் பாரதூரமான குற்றங்களாகும் என்றும் செய்யத் அல் ஹ¥சைன் கூறினார்.

இலங்கையில் நம்பிக்கைதரும் புதிய அரசியல் சூழலின் மத்தியில் இந்த அறிக்கை முன்வைக்கப்படுவதுடன், நம்பகத்தன்மையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரக் கூடிய வரலாற்றுச் சிறப்புடைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பொறுப்புக் கூறலை ஒரு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் கையாள்வதாக புதிய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாராட்டத்தக்கது.

ஆனாலும் துரதிஷ்டவசமான உண்மை என்னவெனில் இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறை இதை செயற்படுத்துவதற்கு திறனற்றதாக உள்ளது” என ஹுசைன் தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்ப தற்காக உள்நாட்டு குற்றவியல் நீதிக்கட்டமைப்பு, சீர்திருத்தப்பட்டு வலுவாக்கப்பட வேண்டும். ஆனால் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்வதற்கு பல்லாண்டு காலம் தேவைப்படும்.

ஆகையால் இச்சீர்த்திருத்தம் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு இணைவாக செயற்படுத்தப்பட வேண்டும் அன்றி அதற்குப் பதிலாக அல்ல.

இவ்வகையான கலப்பு நீதிமன்றம் தேவையான சீர்த்திருத்தங்களை ஊக்குவித்து பொது மக்களின் நம்பிக்கையையும் பெற்று இலங்கையை நீதியான ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்லலாம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

2002 முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் எண்ணற்ற சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் இரு தரப்பினர் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கொலைக ளால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழ் அரசியல்வாதிகள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் உள்ளடங் குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைத்தரப்பினரால் தடுத்துவைக்கப்பட் டோர் மீது குரூரமான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ள ப்பட்டன என்பதுடன், இவ்வாறான பாலியல் வன்முறைகள் அதிகளவில் பிரயோகிக்கப்பட்ட எனினும் அதிர்ச்சி கரமான விடயத்தை விசாரணை வெளிக்கொணர்ந்துள்ளது.

பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட முப்பது பேரிடம் பதிவுசெய்யப்பட்ட துன்பகரமான சாட்சியங்களின் அடிப்படையில் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகள் அல்ல, அதற்கும் மாறாக அவை சித்திரவதை செய்வதை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டு பாவிக்கப்பட்ட பொறிமுறைகள் என்பது தெளிவாவதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பாதுகாப்பு படையினர் பரந்தளவில், குரூரமான சித்திரவதைகளை முக்கியமாக யுத்தம் முடிவடைந்த காலத்தில் இழைத்துள்ளனர். குறிப்பிட்ட சில தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

சித்திரவதை திட்டமிட்ட முறையில் பிரயோகிக்கப் பட்டது என்பதை இது வெளிப்படுத்து கிறது.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வயது வந்தோரைக் கடத்தி, வலுக்கட்டாய ஆட்சேர்ப்பிற்கு ட்படுத்தினர் எனும் விடயம் தெரியவந்தது.

 முக்கியமாக யுத்தத்தின் இறுதிப் பகுதியில் வலுக்கட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு தீவிரமடைந்தது. அது மாத்திரமன்றி புலிகளில் இருந்து பிரிந்து கருணா குழுவினரும் பரந்தளவில் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்து அவர்களை யுத்தத்தில் பாவித்துள்ளமை ஆவணப்படுத்தப்பட்டு ள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை பொது மக்களிலிருந்து வேறுபடுத்தி பிரிப்பதற்காக பிரயோகிக்க ப்பட்ட வழிமுறைகள் சர்வதேச விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாது, அம்முறை அம்மக்கள் துஷ்பிரயோகங்க ளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்துவதற்கு வழிவகுத்தன.

ஏறத்தாழ மூன்று இலட்சம் இடம்பெயர்ந்தோரின் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு மேலாக பறிக்கப்பட்டது மேலும் இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என்பதால் அவர்கள் சந்தேகநபர்களாக நடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறை திறனற்றதாக இருக்கும் அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்பான பொறிமுறை யொன்று இன்னும் ஸ்தாபிக்கப்பட வில்லை. உள்நாட்டு சட்டக்கட்டமைப் பானது பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொள்திறன் இல்லாதுள்ளது.

மூன்றாவது சவால் என்னவெனில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டம், யுத்தம் மற்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பியமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் சிதைவடைந்திருப்பதாக ஹ¥சைன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வரவேற்றிருக்கும் அவர், “இலங்கை முன்னோக்கிப் பயணிப்பதற்கு தசாப்தங்க ளாக நடைபெற்ற உரிமை மீறல்களின் காரணமாக ஆழமாக வேரூன்றியுள்ள அடக்குமுறை கட்டமைப்புக்கள் மற்றும் நிறுவன கலாசாரங்கள் அகற்றப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இது ஒரே நாளில் நடைபெறுவதற்கு சாத்தியமில்லாததால் எவரும் இப்பணியின் கடினத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது என்றும் கூறியுள்ளார்.

காணாமல்போதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உறுதிமொழி கொடுத்திருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமை மற்றும் இம்மாதிரியான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்த கட்டமைப்புகளின் உள்ளக பிரச்சினைகளை வேரோடு அகற்றாமையினால் வெள்ளை வான்கள் தேவையான தருணத்தில் மீண்டும் நடைமுறப்படுத்தப்பட்டன.

 இந்த அரசாங்கம் இத்தனித்துவமான வாய்ப்பைப் பயன்படுத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதனை இல்லாதொழிக்க வேண்டும்.

அரச நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் செயற்படும் விதங்களில் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.


Add new comment

Or log in with...