கொகா-கோலா அரசுக்கு அழுத்தம்

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் Coca-Cola நிறுவனத்தின் இலங்கையின், கடுவெலை பிரதேச தொழிற்சாலையின் சுரங்க வழி எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக களனி கங்கையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதனால் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் Coca-Cola நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு ஒரு பில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பெரும் பாதிப்படைந்த Coca-Cola நிறுவனம் அமெரிக்க அரசின் அதிகாரிகளினூடாக, குறித்த அனுமதிப்பத்திரத்தை மீள்வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அரசாங்க அதிகாரிகள் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு குறித்த அபராதத் தொகையை குறைக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டதன் மூலம் சூழல் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த ஆதாரங்கள் உள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை  குறிப்பிட்டுள்ளது.
 
குறித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையால் குறிப்பிட்ட பிரதேசத்தில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு குறித்த நீரை மக்கள் பாவனையிலிருந்து தடுக்கப்பட்டதோடு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் நீரியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடள் இணைந்து குறித்த நீர் சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் உறிஞ்சப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
 
எனினும், ஏற்பட்ட பாதிப்பை குறித்த நாளில் உடனடியகா சீர் செய்ததாக குறிப்பிட்ட Coca-Cola நிறுவனம் எனவே அபராதத் தொகையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் விடுத்துள்ளது.

Add new comment

Or log in with...