2020 இல் ஐ.தே.க ஆட்சி: ஆளும் முறையில் பாரிய மாற்றம் ஏற்படும்

ஐக்கிய தேசியக் கட்சி 2020இல் ஆட்சி அமைத்து இலங்கை வரலாற்றில் சரித்திரம் படைக்குமென இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண நேற்று தெரிவித்தார்.

வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றம் உள்ளிட்ட ஆட்சி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.தே.க இப்போது முதலே திட்டமிட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்து மாற்றங்களும் எவராலும் மாற்றப்பட முடியாதவாறு கல்லில் செதுக்கப்படுமென்றும் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐ.தே.க 2020இல் மக்கள் ஆணையைப் பெறுவது உறுதி. இதனையடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தை என்றும் இல்லாதவாறு பலப்படுத்துவோம்.

புதிய அரசியலமைப்புக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை நாம் கல்லில் எழுதுவோம். இதன் மூலம் எதிர்காலத்தில் எவராலும் தாம் நினைத்தவாறு எதனையும் மாற்றியமைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

சீனா மற்றும் இந்தியாவுடன் நாம் சிறந்த உறவை ஏற்படுத்தியுள்ளோம். அதேபோன்று ஜப்பானும் எமக்கு உதவி வழங்க முன்வருமாயின் அதனை நாம் வரவேற்போம் என்றும் தெரிவித்தார். அத்துடன் இளைஞர், யுவதிகள் வேலைத் தேடி அரசியல்வாதிகளை நாடிச் செல்லும் நிலை நாட்டில் தொடரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அதற்காகவே என்டர்பிரைஸ் சிறிலங்கா எனும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 

 


Add new comment

Or log in with...