ஜெயலலிதா காலமானார்; தமிழகத்தில் 7 நாள் துக்கதினம் (Update)

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா (68) சிகிச்சை பலனின்றி சென்னை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.

சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர், நேற்று (05) இரவு 11.30 மணிக்கு பிரிந்ததாக அப்பலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.

இதேவேளை தமிழ் நாட்டில் 7 நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அ.தி.மு.க. உறுப்பினரும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் தற்போது, தமிழகத்தின் 27 ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இது அவரது மூன்றாவது பதவிப்பிரமாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

ஜெயலலிதாா காலமானதாக தமிழகத்தில் பதற்றம்

மாரடைப்பு ஏற்பட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சென்னை அப்பலோ மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக வெளியான செய்திகளால் நேற்று தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் காலமானர் என்ற செய்தி நேற்றுப் பிற்பகல் திடீரென வெளிவந்த நிலையில் அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் அதனை மறுத்தன.

ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு தமிழகமெங்கும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. மருத்துவமனை உட்பட்ட பிரதேசங்களில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழக முதல்வர் காலமானார் என்ற செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்து. இலங்கையிலும் அந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலமானார் என்ற செய்தியை இந்திய இணையத் தளங்கள் மற்றும் தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன. அ. தி. மு. க. தலைமையகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களிலேயே இணையத்தளங்கள் மற்றும் செய்திப் பத்திரிகைகளில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடி முழுக் கம்பத்திற்கு உயர்த்தப்பட்டது. அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களும் மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தன.

ஜெயலலிதா காலமானர் என வெளியான தகவலையடுத்து கட்சித் தொண்டர்கள் கலவரமடைந்து மருத்துவமனைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதனால் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் தொண்டர்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்தும் உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வரின் உடல் நலம் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்ததுடன் அதன் நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அறிக்கையொன்றையும் வெளியிட்டார். அதனையடுத்து மாலை ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்காக மருத்துவமனையிலிருந்த ஏனைய நோயாளிகள் அதன் கிளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா காலமாகவில்லை என்ற செய்தி வெளியானதும் அவது உடல் நலத்துக்காக தமிழகமெங்கும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் நலம்பெற அரசியல் தலைவர்களும் தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்தனர். இத்தகவல்களுக்கு இலங்கையிலும் ஊடகங்கள் முக்கியத்துவமளித்திருந்தன. (ஸ) முதல்வர்


Add new comment

Or log in with...