ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை ஆட்பதிவு திணைக்களத்தின் கிளையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தற்போது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இச்செயற்பாட்டினை அவதானிக்கும் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜி. பிரதீப் சபுதந்திரி அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா, கணக்காளர் ஐ.எம்.பாரீஸ், நிருவாக உத்தியோகத்தர் ஜே. எம். ஜெமில், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் கிளைத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கடவுச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறைக்கான கைரேகைகள் பதிவு செய்யும் பணி கடந்த 21 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான விரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கைரேகை பதிவு செய்யும் பிரதேச செயலகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

--எம்.எப்.நவாஸ்...

(திராய்க்கேணி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...