கொழும்பு மேற்குப் பிரிவின் காதிநீதிவான் சட்டத்தரணி எம்.எஸ்.எம். அம்ஹர்
ஸ்லிம் சமூகத்துக்கான பாரம்பரிய காதிநீதிமன்ற கட்டமைப்பு முறைமை பாதுகாக்கப்படல் வேண்டும். இதன் பொருட்டு முஸ்லிம் சட்டத்தரணிகள் பலரும் காதிநீதவான் பதவியை பொறுப்பேற்று செயல்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயம் என்று கொழும்பு மேற்குப் பிரிவின் காதியும் கொழும்பு தெற்கு பிரிவின் பதில் காதியுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம். அம்ஹர் தெரிவித்துள்ளார்.
காதிநீதிமன்றக் கட்டமைப்பின் கொழும்பு மேற்குப்பிரிவு காதிமன்றின் பணிமனை கல்கிசை மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள தனியார் கட்டடத்தில் தெஹிவளை - கல்கிசை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அனுசரணையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இப்பணிமனையினை திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாயிஸ் முஸ்தபா கலந்து கொண்டதோடு, தெஹிவளை - கல்கிசை பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரமுகர்கள், தொழிலதிபர் மிஸ்வர் மக்கீன், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காதிநீதிமன்ற கட்டமைப்பின் கொழும்பு மேற்குப் பிரிவில் ஹோமாகம, மகரகம, ராஜகிரிய, தெஹிவளை, கல்கிசை, நுகேகொடை, இரத்மலான, பெபிலியான, பன்னிபிட்டிய, பொல்கஸ்ஓவிட, இங்கிரிய, பத்தரமுல்ல, அதுருகிரிய ஆகிய பிரதேசங்களும் கொழும்பு
தெற்குப் பிரிவில் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலப்பனை , ஜாவத்தை மற்றும் நாராஹேன்பிட்டி பிரதேசங்களும் உள்ளடங்கியுள்ளன.
இவ்வைபவத்தில் சட்டத்தரணி அம்ஹர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த வருடம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக காதிமார் தமது பணிகளை முன்னெடுப்பதிலும், நிருவாக பணிமனைகளை கொண்டு நடத்துவதிலும் பலவகையான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வருவதன் விளைவாக அப்பிரச்சினைகள் கட்டம் கட்டமாக நீங்கி வருகின்றன.
காதிநீதிமன்றக் கட்டமைப்பு செயலாக்கத்தின் போது எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். இந்நிலையை மாற்றி அமைக்கவென சமூக ஆர்வலர்கள், பரோபகாரிகள், சமூக பொதுஅமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் அமைப்புகளின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானதாகும்.
காதிநீதிமன்றக் கட்டமைப்பை முறையான திட்டத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்த கட்டமைப்பாக மாற்றியமைத்தல் வேண்டும். அந்த வகையில் எனது சேவைக்குரிய காதிப் பிரிவை முன்மாதிரியானதொரு பிரிவாக முன்னெடுத்துச் செல்ல நான் எதிர்பார்க்கின்றேன். சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளேன். இத்திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் காதிமன்றுகளுக்கு வரும் முறைப்பாடுகள் எதிர்காலத்தில் பெரிதும் குறைவடைந்து விடும்.
குறிப்பாக குடும்ப வாழ்வு போதிய அறிவு, தெளிவின்மை, கணவன் மனைவிக்கிடையில் உரிய புரிந்துணர்வின்மை, குடும்ப வாழ்வுக்கு அவசியமான பக்குவமின்மை என்பவற்றினால் சிறுசிறு பிரச்சினைகள் கூட விவாகரத்துக்கான காரணங்களாக காதிமன்றுக்கு எடுத்து வரப்படுகின்றன. இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். தம்பதிகள் எடுத்த எடுப்பில் காதி மன்றை நாடிவரும் நிலை மாற்றப்படல் வேண்டும். குறிப்பாக காதி நீதிமன்றுக்கு வரும் முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முன்னர் முறைப்பாட்டில் சம்பந்தப்படும் தம்பதியினரை முதலில் உளவள ஆலோசனை சிகிச்சைக்கு உட்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். அதற்கேற்ப அவர்கள் குறிக்கப்பட்ட காலம் உளவள ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். (06ஆம் பக்கம் பார்க்க)
எம்.எஸ்.எம். முன்தஸிர்...
(பாணந்துறை குறூப் நிருபர்)
Add new comment