மக்கள் வங்கியின் 62 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

மக்கள் வங்கி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்குச் சிறப்பினை வழங்கும் மற்றும் சேவையாற்றுவதில் 62 ஆவது ஆண்டு நிறைவை ஜூலை 01 ஆம் திகதி கொண்டாடியது. 14.7 மில்லியனுக்கும் மேலான வாடிக்கையாளர் தளம் மற்றும் ரூபா. 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்கள் ஆகியவற்றுடன், இலங்கையில் பொதுமக்களுக்கு வங்கிச்சேவை கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இன்று மக்கள் வங்கியானது நாட்டின் பெரும்பாலான கிராமப்புறங்களுக்கும் அதிநவீன டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குவதன் மூலம் தனது பொறுப்பை தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இன்று, நாடு முழுவதும் 745 சேவை மையங்கள் மூலமாக தனிநபர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது.

தனது Mahajana Mehewara என்ற வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம், கொவிட் 19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரதான அரச மருத்துவமனைகளுக்கு ரூபா. 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள முக்கிய மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு வங்கி தனது ஊழியர்களுடன் சேர்ந்து நிதியளித்துள்ளது.

சீமாட்டி ரிட்ஜ்வே மற்றும் காசல் மருத்துவமனைகளுக்கு ரூபா.10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரியமின்சக்தியில் இயங்கும் மின்சாரக் கட்டமைப்புகளை வழங்கியுள்ளது.

கூட்டுறவு வணிகம் மற்றும் கிராமிய வங்கிச்சேவை முறைமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மக்கள் வங்கி நிறுவப்பட்டது. அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைச்சர் டி.பி. இலங்கரத்னவினால் இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வின்சென்ட் சுபசிங்க மக்கள் வங்கியின் முதல் தலைவராக இருந்தார்.

விவசாயக் கடன்கள், அடகு வைத்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிக் கடன்கள், மகளிர் சேமிப்புக் கணக்குகள், சிறுவர் சேமிப்புக் கணக்குகள் போன்ற பலவற்றை முதன்முதலாக மக்கள் வங்கி நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் வங்கி தனது டிஜிட்டல் வங்கிச்சேவைத் திட்டத்தை 2015 இல் அறிமுகப்படுத்தியது. அதன் செயற்பாடுகளின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு விரிவான டிஜிட்டல் படிமுறை மாற்றத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த நாட்டின் முதல் வங்கி இதுவாகும். இதன் விளைவாக, மக்கள் வங்கி இப்போது அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகிறது. மக்கள் வங்கி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

SLIM Nielsen மக்கள் அபிமான விருதுகள், தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் மற்றும் LankaPay Technnovation விருதுகள் ஆகியவை வங்கியால் பெறப்பட்ட சில உள்நாட்டு விருது அங்கீகாரங்களாகும். சர்வதேச அளவில், மக்கள் வங்கி தனிநபர் நிதிச் சேவைகளில் Asian Banker Excellence விருது, Asia Money Best Bank விருதுகள், SAFA விருதுகள், Asian Digital Finance Forum விருதுகளைப் பெற்றுள்ளது.


Add new comment

Or log in with...