இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ

- இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர். மஞ்சுள பெனாண்டோ இன்று (23) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க தேசிய அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மூலம், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்கவின் இடத்திற்கோ அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆவது பிரிவின் பிரகாரம் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்ததது.

ஜனக ரத்நாயக்கவுக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் நிலவி வந்ததைத் தொடர்ந்து குறித்த பதவியிலிருந்து அவரை நீக்க, அமைச்சர் கஞ்சன நடவடிக்கைகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ
பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ 1993 இல் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் தரப் பட்டத்துடன் தனது BScEng பட்டத்தைப் பெற்றார். மேலும் அவருக்கு இலங்கை மின்சார சபையினால் வழங்கப்ப்ட முதலாவது தங்கப் பதக்கம் மற்றும் மின்சாரம் மற்றும் இலத்திரனியல் பொறியியலில் சிறந்த செயல்திறனுக்கான பரிசும் வழங்கப்பட்டது. சுவீடனின் Royal Institute of Technology இருந்து Technical Licentiate பட்டமும், 1997 மற்றும் 1999 இல் சுவீடனின் Chalmers தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.

1993 ஆம் ஆண்டு மே மாதம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையில் பயிற்றுவிப்பாளராகப் பணியை ஆரம்பித்த அவர், தற்போது சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அவரது பணியின் போது, ​​அவர் Fachbereich Elektrotechnik, HTWS, Zitau ஜேர்மனி, Chalmers University of Technology சுவீடன், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியம், Brescia இத்தாலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு ஆராய்ச்சியாளராக பணியாற்றியிருந்தார்.

அவர் 2010 முதல் IEEE இன் சிரேஷ்ட உறுப்பினராக இருந்து வருகின்றார்.


Add new comment

Or log in with...