இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிரேஷ்ட அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியா செல்வதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் நஜாம் செதி குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வரும் செப்டெம்பரில் பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய ஆசிய கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்திருப்பது நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போட்டியை இரு நாடுகளில் நடத்தும் வகையில் கலப்பு முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்திருப்பதோடு பொது இடத்தில் நடத்த இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளரான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஆசிய கிண்ணத்தை நடத்தும் இடம் மற்றும் திகதியை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான திகதி மற்றும் மைதானங்கள் பற்றிய விபரம் லண்டனில் எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியின்போதும் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) பாகிஸ்தானை சென்றடைந்திருக்கும் ஐ.சி.சி தலைவர் கிரேக் பார்க்லே மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் அலர்டிஸ் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் விஜயத்தின்போது இவர்கள் பாக். கிரிக்கெட் சபை தலைவர் மற்றும் கிரிக்கெட் அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
Add new comment