வெள்ளிக்கிழமை முதல் பஸ் கட்டணங்கள் 12.9% இனால் குறைப்பு

- டீசல் விலை 3 கட்டங்களில் ரூ. 105 ஆக குறைப்பு
- எரிபொருள் விலை குறைப்பின் உடனடி நிவாரணம் மக்களுக்கு
- ரூ. 34 ஆக உள்ள குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 ஆக குறைப்பு
- 350 பஸ் கட்டணங்கள்; சொகுசு, அதி வேக வீதி பஸ் கட்டணங்களும் குறைப்பு

நாளை நள்ளிரவு (31) முதல் பஸ் கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவித்துள்ளார்.

அந்த வகையில், ரூ. 34 ஆக உள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 30 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றையதினம் (29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரான பந்துல குணவர்தன கடமை நிமித்தமாக வெளிநாடு சென்ற நிலையில், பதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சசராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த அழகியவன்ன குறித்த அறிவித்தலை வெளியிட்டார்.

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு (30) முதல் குறைக்கப்படுவதைத் தொடர்ந்து, அது தொடர்பான நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியினால் விடுத்த அறிவுறுத்தலுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முறையே டீசல் விலை ரூ. 10 மற்றும் ரூ. 15 இனால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ. 80 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அமைய, குறித்த பஸ் கட்டண குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

அதற்கமைய, 350 சாதாரண சேவை பஸ் கட்டணங்கள், நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள், சொகுசு பஸ் சேவை பஸ் கட்டணங்கள் யாவும் இவ்வாறு 12.9% இனால் குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய போக்குவரத்து கொள்கைகளுக்கமைய, ஜூலை மாதம் 01ஆம் திகதி பஸ் கட்டண திருத்தம் இடம்பெறுவது வழக்கமாக இருந்த போதிலும் தற்போது பாரிய அளவில் எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அது தொடர்பான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம குறிப்பிட்டார்.

அதற்கமைய, நாளை வியாழக்கிழமை (30) எரிபொருள் விலை குறைப்பை அடுத்து, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (31) முதல் பஸ் கட்டணங்கள் குறைப்பு அமுலுக்கு வருகின்றது.


Add new comment

Or log in with...