கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்; மட்டக்குளி, காக்கைதீவு பகுதியிலிருந்து ஆரம்பம்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்ததனால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் சுற்றாடல் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் துடாவ பிரதர்ஸ் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இதன்போது கருத்துரைத்த சாகல ரத்நாயக்க,
இலங்கையின் அழகிய கடற்கரைகள், சூழல், கலாசார பாரம்பரியம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. எனவே, அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், கடற்கரையையும் பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை வலுவாகப் பேணுவது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கரையோரப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நிலையான முறையில் அமுல்படுத்தப் போவதாகத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல, Clean Ocean Force அமைப்பின் தலைவர் ஜெரோமி பெனாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 


Add new comment

Or log in with...