நிதி மோசடி; பணி இடைநிறுத்தப்பட்ட கல்முனை மாநகர ஊழியர்கள் இருவர் தலைமறைவு

நிதி மோசடியில் ஈடுபட்ட கல்முனை மாநகர சபை ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், பொலிஸ் உயரதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள நிதிக் கையாடல் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் எவராயினும்  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி வந்த இரு ஊழியர்கள் நிதிக்கையாடலில் ஈடுபட்டுள்ள விடயம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நான் ஆணையாளருக்கு வழங்கிய ஆலோசனைகளின் பிரகாரம் அவர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, நிதிகையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முகத்தோற்றளவில் அவ்விரு ஊழியர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருப்பதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த ஊழியர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி, முறைகேடுகள் எவையும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

குறித்த நித்திகையாடல் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இவ்விடயம் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, குறித்த இருவரும் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், எவ்வாறாயினும் இவர்களைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை நான் வலியுறுத்திக் கேட்டுள்ளேன். அத்துடன் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் எவர் மீதும் கருணை காட்டப்பட மாட்டாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிதி மோசடியுடன் எவர் சம்மந்தப்பட்டிருந்தாலும் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கப்படும்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.

(சாய்ந்தமருது விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...