மதுஷ்கவின் இரட்டை சதத்துடன் வலுப்பெற்றது இலங்கை ஏ அணி

நிஷான் மதுஷ்கவின் இரட்டைச் சதத்தின் உதவியோடு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை ஏ அணி வலுவான நிலையை பெற்றுள்ளது.

காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (02) ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 580 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்மூலம் இலங்கை அணி மேலும் ஏழு விக்கெட்டுகள் கைவசம் இருக்க இரண்டாவது இன்னிங்ஸில் 249 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (03) இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

228 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில் நேற்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை ஏ அணி நாள் முழுவதும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக 91 ஓட்டங்களுடன் நேற்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மதுஷ்க கடைசிவரை ஆட்டமிழக்காது 370 பந்துகளில் 24 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 207 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது அவர் லக்ஷான் மானசிங்கவுடன் (73) இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோவுடன் (80) மூன்றாவது விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டார்.

நேற்று ஆட்டநேர முடிவின்போது அணித்தலைவர் நபுன தனஞ்சய மற்றும் மதுஷ்க பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 145 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் தனஞ்சய 131 பந்துகளில் 15 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியால் நேற்றைய நாள் முழுவதிலும் இலங்கை ஏ அணியின் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்த முடிந்தது.

இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையிலேயே இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் வெற்றியை எதிர்பார்த்து இலங்கை ஏ அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்றைய தினத்தின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

 


Add new comment

Or log in with...