மின்வெட்டை அமுல்படுத்தாதிருத்தல்; மனித உரிமைகள் ஆணைக்குழு அச்சுறுத்தியே கையொப்பம்

- சிறைக்கு அனுப்புவதாக அச்சுறுத்தல்; கையொப்பமிட அழுத்தம்
- ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை
- மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன காட்டம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களால் தாம் உடன்படாத இரண்டு ஆவணங்களில் கையொப்பமிடுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தியதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் பங்குபற்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், குறித்த சம்பவம் குறித்து எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளதாகவும அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துட், தாம் இது தொடர்பில் நேற்று காலை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த விடயத்தை அரசியலமைப்பு சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த. உயர் தர பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பது தொடர்பில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததோடு, அதில் குறித்த காலப் பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன விடுத்த அறிவித்தல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...