வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

- கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மூலம் சலுகை

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை   ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம்  வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் பெண் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) மாலை கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண, தேசிய, சார்க் பிராந்தியம் மற்றும் சிறப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதன்போது தேசிய மட்டத்துக்கான விருதுகளையும் சிறப்பு விருதுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி கௌரவித்தார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும்  அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

பெண்களை வியாபாரத்தில் ஈடுபடுத்த நீங்கள் செய்த முன்னோடி பணிக்காக உங்களை  பாராட்ட வேண்டும், ஆனால் கிராம அளவில் சிறிய கடைகளை நடத்தும் ஏராளமான பெண்கள் இருக்கும்  நுண் வர்த்தகக் குழுக்களையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். விசேடமாக  உணவு, காய்கறி கடைகள் போன்ற சிறு வணிகங்களை நடத்துபவர்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இப்போது நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்? பெரிய நகரங்களில், சிறு தொழில்களில் வேலை செய்யும் பெண்களை அதிகம் பார்க்க முடியாது. ஆனால்  அடையாளம் தெரியாத  பெண்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் கடனுக்கு பணம் கொடுப்பவர்கள். சில பிரதேசங்களில் அவர்கள் தான் வணிகங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். 

எனவே அவர்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நுண் தொழில் முனைவோர்களுக்கு உதவுவதில் அரசாங்கமும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடிகள்.

உண்மையில் நீங்கள் அனைவரும் பெண் தொழில்முனைவோர் என்ற கருத்தை வணிக உலகிற்கு கொண்டு வந்துள்ளீர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இது  தொடர்ந்தும்  அவசியம் என்று நான் நினைக்கிறேன்.  பிரதான சபையானது  மகளிர் சபைக்கு உதவ வேண்டும்.  ஏனைய  நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 52% பெண்கள். எனவே, பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பை அதிகம் பெற வேண்டும். அப்போதே நமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

குறிப்பாக இந்த ஆண்டு சில புதிய சட்டங்களை  அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றை பாராளுமன்ற மகளிர் மன்றம் உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டங்கள் பெண்கள் அதிகாரம் மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு தொடர்பானவை.

டிசம்பரில் அவர்களுடன் ஒரு சுற்று பேச்சு  நடத்தினேன்.   நாட்டின் முக்கிய நிறுவனங்களின்  பணிப்பாளர் சபையில்   குறைந்தது ஓரிரு  பெண் பிரதிநிதிகளை நியமிக்க  முடியுமா என்று கேட்டனர். இது ஒரு புரட்சிகரமான மாற்றம். இதற்கு வர்த்தக சம்மேளனம்  என்ன சொல்லும் என்று தெரியவில்லை. ஆனால் தனியார் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க  பாராளுமன்ற மகளிர் மன்றம் தயாராகி வருகிறது.

அரச துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திகரமாக இருந்தாலும், தனியார் துறையில்தான் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இங்கு வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். ஏனெனில் அவர்கள் இந்த சாதனைகளை மிகவும் கடினமான ஆண்டில் அடைந்துள்ளனர். பெண்கள், ஆண்கள் மற்றும் குடும்பங்கள் நடத்தும் பல தொழில்கள் வீழ்ச்சியடைந்த ஆண்டு. ஆனால் இத்தனை தடைகள், பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நீங்கள் அனைவரும் உங்கள் தலையை நிமிர்ந்து வைத்திருக்க முடிந்தது. எனவே உங்கள் சாதனைகள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன்.

இந்த காலப்பகுதி  வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமின்றி வேலை செய்பவர்களுக்கும் கடினமான காலம். வீட்டில் உள்ளவர்களும் இந்த சிரமங்களை உணர்கிறார்கள். நாம் அனைவரும் இன்னும் உணர்கிறோம். நாம் கடந்து செல்லும் காலங்கள் பல சவால்கள் நிறைந்த காலமாகும்.

இன்று  அனைவரும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்கிறார்கள். தொழில்களை இழக்கின்றனர். வருமானம் குறைகிறது, எதிர்காலத்தைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிலர் எதிர்காலம் இருண்டுவிட்டது  என்று  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிலையை அனுபவிக்கின்றனர்.

நாடு ஏன் இந்த நிலைக்கு வந்தது? நமது பொருளாதாரம் ஏன் சரிந்தது? அது குறித்து   விவாதிப்பதில் அர்த்தமில்லை. தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. அந்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவைத் தான்  இன்று அனுபவிக்கிறோம். நமது பணவீக்கம் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.  நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. நாம் எப்படி வங்குரோத்து  நிலையில் வாழ முடியும்?  வங்குரோத்து நிலையிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? இவற்றை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு தனி நபர் கடனில் இருந்தால், அதை தீர்க்க முடியும். உறவினரிடமிருந்து நண்பரிடம் உதவி  கேட்கலாம். ஆனால் நாடு வங்குரோத்தானால்   அதற்கு உதவ உலகில் ஒரே ஒரு அமைப்புதான் இருக்கிறது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். நாம் எவ்வளவோ சப்தமிட்டாலும்  பிரார்த்தனை செய்தாலும் வேறு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காது. இறுதியாக, இந்த அமைப்பிலிருந்து மட்டும்தான் எங்களுக்கு உதவியும் நிவாரணமும் கிடைக்கிறது.

நாங்கள் அங்கு சென்று இது குறித்து பேச்சு நடத்தினோம். தாம்  நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டில் இலாபமீட்டாத எந்த ஒரு  நிறுவனமும் இருக்க முடியாது என்று  சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. திறந்த பொருளாதாரம் இருந்தால், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மற்ற துறைகளுக்கு வழங்க வேண்டும். அரசு நிர்வகிக்கும்  நிறுவனங்கள் இலாபகரமாக இருக்க வேண்டும். அப்படி நடந்தால் அரசின் பணம் மக்களுக்கு பயன்படலாம். இல்லையெனில், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நடத்துவதற்கு அந்த பணத்தை அரசு செலவிடுகிறது.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இல்லாவிட்டால், மக்களுக்கு நிவாரணம் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கப் பணத்தை செலவிட முடியும். இந்த நேரத்தில் நாமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நான் பதவியை பொறுப்பேற்கும் போது சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன்  அதிகாரிகள் மட்ட  ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத்தான் இப்போது செயல்படுத்தி வருகிறோம்.  கடந்த ஆண்டு அனைத்து கடினமான தீர்மானங்களையும் எடுத்தோம்.

அதற்கான பலன் இந்த ஆண்டு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். நான் இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். மின்சார சபை கட்டணத்தை அதிகரித்ததன் பின்னரும்கூட அங்கே இன்னும் 350 பில்லியன் ரூபா நட்டம் காணப்படுகிறது. நட்டத்தில் மின்சார சபையை கொண்டு நடத்த முடியாது. அது வீழ்ச்சிக் காணும். வங்கிகளும் கடனுக்கு பணத்தை வாங்குவதால் சரிவடையும். அப்படியானால், நாம் வட் வரியை (VAT) அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை நாம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு உதவி கிடைக்காது. எனவே, விருப்பம் இல்லாவிட்டாலும்கூட எமக்கு இதைச் செய்ய நேரிடும்.

இந்த வேலையைச் செய்யும்போது யாரும் கைதட்ட மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதையறிந்தே நாம் இந்த வேலையை ஏற்றுக்கொண்டோம். இந்த கடினமான தீர்மானங்களை நாம் எடுத்தேயாக வேண்டும். அந்த முடிவுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். இதனால், பொருட்களின் விலை உயரும். எனினும் கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த உதவிகளால் எரிபொருள் பிரச்சினை, உணவுப் பிரச்சினை, உரப்பிரச்சினை போன்றவற்றை தீர்க்க முடிந்துள்ளது.

எமக்கு உரங்கள் கிடைத்துள்ளதால், இம்முறை பெரும்போகத்தில் எமக்கு மிகச் சிறந்த விளைச்சல் கிடைக்கும். உண்மையில் எமக்கு நெல் மேலதிகமாக கையிருப்பில் உள்ளது.

இது பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். இதன் மூலம் வாழ்க்கைச் செலவும் குறையும். சில உணவுப் பயிர்கள் அதிகமாகவே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள அனைவரும் வரிச் செலுத்த நேரிட்டுள்ளது. சில அரச தொழில்துறைசார்ந்தவர்கள்கூட இதற்கு எதிராகப் பேசுகிறார்கள். சிலர் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் நடத்துவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் அதற்குரிய தீர்வு என்ன என்று கூற வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதும், கூச்சலிடுவதும் உலகில் எந்த நாட்டிலும் நடப்பதே. அவற்றை நிறுத்த முடியாது.

இந்த முடிவுகளில் இருந்து விலகி நாம் என்ன செய்வது? நாட்டுக்கு என்ன நடக்கும்? சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தில் இருந்து விலகினால், நமக்கு யார் நிதியுதவி செய்வார்கள்? விலை உயர்த்தப்பட்டால் வாழ்க்கைச் செலவுக்கு சிரமம் ஏற்படும். விலையை உயர்த்தவில்லை என்றால் உதவி கிடைக்காது. அதனுடன் பொருளாதாரம் வீழ்ச்சிக் காணும்.

இதுவே எங்களுக்குள்ள மிகவும் கடினமான பணி. எம்மால் இப்படி எந்த நாளும் வாழ முடியாது. கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் நாம் விரைவாக முன்னேற வேண்டும். வர்த்தகச் செயற்பாடுகளுக்கு  தற்போதைய பணவீக்கம் ஒரு பிரச்சனையாக உள்ளது. நாம் இந்த தீர்மானங்களை தொடர்ந்தால், பணவீக்கத்தை குறைக்க முடியும். வங்கியின் வட்டியை குறைக்கலாம். சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் பணவீக்கம் உயர்வடையும்.

கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை ஒத்திவைப்பது ஒரு பெரிய பிரச்சனை. எனினும் கடன்களை ஒத்தி வைக்க வேண்டிய வர்த்தகங்களுக்கு அதற்கு அவசியமான சலுகைகளை பெற்றுக் கொடுக்குமாறு நான் மத்திய வங்கி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

வங்கிகளிலும் சிக்கல்கள் உள்ளன. வங்கிகளை முதலில் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் வங்கிகள் வங்குரோத்தடையும். வங்கிகளைப் பாதுகாத்த பின்னர், தொழில்களை தொடங்கலாம்.

நாங்கள் இப்போது பணிகளை முன்னெடுத்துச் செல்வதால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவிலேயே பெறக்கூடியதாக இருக்கும். எமக்கு கடன் வழங்கிய நாடுகள் எமக்கு ஆதரவளிக்க தயார் என ஏற்கனவே அறிவித்துள்ளன.

எமது பிரதான மூன்று கடன் வழங்குநர்களுடன் ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியனவும் ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியா மற்றும் சீனாவுடனும் நாம் அதுதொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம்.

நான் நேற்று சீனா எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடினேன். எங்கள் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றி இப்போது கலந்துரையாடி வருகின்றோம். விரைவில் அதைச் செய்ய சீனத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டரை பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்பிறகு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்கள் வரை எமக்கு கிடைக்கும். அப்போது எமது கைகளுக்கு ஏழரை பில்லியன் டொலர்கள் கிடைக்கும்.

இலாபமில்லாத அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்காக கிடைக்கும் மூன்று பில்லியன் டொலர்களையும் சேர்த்தால் 10 பில்லியன் டொலர்கள் வரை கிடைக்கும். அப்போது நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கூடியதாக இருக்கும். நாம் அந்த நிலையை அடைய வேண்டும். மக்கள் எல்லா நேரத்திலும் கஷ்டப்பட முடியாது. நாம் இந்த நிலையில் இருந்து மீளவேண்டும்.

இப்போது நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இங்கிருந்து நாம் முன்னேற வேண்டும். கசப்பான மருந்தை சாப்பிட வேண்டி ஏற்பட்டுள்ளது. பொதுவாக இந்த நோயை பரப்பியவர்களை திட்டாமல், மாறாக கசப்பு மருந்து தரும் வைத்தியரையே திட்டுகின்றார்கள். திட்டினாலும் பரவாயில்லை, இந்த கசப்பு மருந்தை சாப்பிட்டுவிட்டு பொருளாதாரத்தை குணப்படுத்தும் திட்டத்திற்குச் செல்வோம்.

இந்த வருடம் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு எமக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இதையெல்லாம் செய்ய நாம் கஷ்டப்பட வேண்டும். இதையெல்லாம் எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நான் அதை நம்புகின்றேன். பிறகு புதிய தொழில்களைப் பற்றி சிந்தித்து, உலகத்துடன் போட்டியிடக்கூடிய புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை எம்க்கு கிடைக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, நேபாள தூதுவர் பஷு தேவ் மிஸ்ரா, பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டோல் மற்றும் மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி அனோஜி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...