இந்திய உதவியுடன் வடக்கு ரயில் பாதை புனரமைப்புத் திட்டம் ஆரம்பம்

- அநுராதபுரம் - ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு
- ரூ. 33 பில்லியன் செலவில் திட்டம்
- 5 மாதங்களுக்கு ரயில் பாதை மூடப்படும்

வடக்கு ரயில் பாதை புனரமைப்புத் திட்டம் நேற்று (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான மேற்படி ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அதனையொட்டி அநுராதபுரம் ருவன்வெலிசெய வில் நேற்று நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்விலும் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸதானிகரும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று ரயில் பாதை புனரமைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஐந்து மாத காலங்களுக்கு அநுராதபுரம் - வவுனியா வரையிலான ரயில் சேவைகளை முற்றாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை அபிவிருத்தி திட்டம் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

இலங்கையின் புகையிரதக் கட்டமைப்பினை மேம்படுத்தும் இந்தியா

இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் தலைமையில்,  2023 ஜனவரி 08 ஆம் திகதி மதவாச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித்திட்டத்தின் அடிப்படையில் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய பொதுத்துறை கம்பனியான IRCON நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும், மாஹோ முதல் ஓமந்தை வரையான (128 கிமீ) புகையிரதப் பாதை புனரமைப்பு பணிகள் சம்பிரதாய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஶ்ரீபால கம்லத் மற்றும் இலங்கை போக்குவரத்துத்துறை அமைச்சின் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுவரும் ஆதரவுக்காக நன்றியினைத் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையில் IRCON நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பாராட்டிய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையில் ரயில்வே துறையில் சிறந்த ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

ஐந்து இந்திய கடனுதவி திட்டங்களின் கீழ் ரயில்வே துறையில் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான திட்டங்களை இந்தியா நிறைவேற்றியுள்ளதென இங்கு உரையாற்றியிருந்த உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கு மேலதிகமாக  சுமார் 180 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்கள் தற்போதுள்ள கடனுதவி திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன அல்லது திட்டமிடப்பட்டு வருகின்றன. மேலும், இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் அசைவியக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ரயில்வே துறையினை நவீனமயப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன் இரு நாட்டு மக்களின் நலனுக்காக யாத்திரைகள், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடனும் உள்நாட்டிலும் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். மேலும் சூழலுக்கு உகந்ததும் ஸ்திரமானதுமான போக்குவரத்து தீர்வுகளை அறிமுகப்படுத்த இந்தியா இலங்கையுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாக இந்திய அரசாங்கம், நன்கொடை திட்டங்களாகவும் சலுகைக் கடன் அடிப்படையிலும் இலங்கையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த வசதிகளின் கீழ் பல்வேறு துறைகளிலும் காணப்படும் ஒத்துழைப்புகளில் இலங்கையின் புகையிரதப் பாதையினை நவீன மயப்படுத்தி தரமுயர்த்துதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. மார்ச் 2009 இல் IRCON இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன், வடக்கு மாகாணத்தின் முழுவதுமான (253 கிமீ) ரயில் பாதை வலையமைப்பையும் புனரமைப்பதன் மூலமும், தெற்குப் பாதையை (115 கிமீ) மேம்படுத்துவதன் மூலமும் இலங்கை ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. அத்துடன் 330 கிமீ நீளமான ரயில் பாதையில் நவீன சமிக்கை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு மூலம் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் இது பங்களிப்பு வழங்கியுள்ளது. 

2022 ஏப்ரலின் பின்னரும் பல்வேறு கடனுதவித்திட்டங்களின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு தொடர்கின்றது. அண்மையில், மற்றொரு கடனுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவரும் 500 மஹிந்ரா SUVகளில் 125 இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று, இன்னொரு கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற 500 அசோக் லேலண்ட் பஸ்களில் 75 பஸ்கள் கடந்த வாரம் இலங்கை போக்குவரத்து சபையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...