உள்ளூராட்சி சபை தேர்தல்: ஜனவரி 18 - 21 வரை வேட்புமனுத் தாக்கல்

- நாளை முதல் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
- வட்டாரங்கள், வேட்பாளர் எண்ணிக்கை, கட்டுப்பண விபரம் வெளியீடு
- இன்று முதல் ஜனவரி 20 வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்
- அரசியல் கட்சி வேட்பாளருக்கு தலா ரூ. 1,500
- சுயேச்சைக்குழு வேட்பாளருக்கு தலா ரூ. 5,000

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் ஜனவரி 18 முதல் கோரப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய,உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஜனவரி 18 முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12.00 வரை சமர்ப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 26ஆவது பிரிவின் கீழ், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான மேயர்/ பிரதி மேயர்/தலைவர், பிரதி தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இன்றையதினம் (04) முதல் உரிய அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கைமய ஒரு அரசியற் கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழுவினால், முதலாவது மற்றும் இரண்டாவது வேட்புமனுக்களில் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, முதலாவது மற்றும் இரண்டாவது வேட்புமனுக்களில் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் வைப்புத்தொகை விபரங்கள், உரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2022 டிசம்பர்  29ஆம் திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 23/1244 இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று (04) முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், நாளை (05) முதல் ஜனவரி 23 நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து கோரப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது. 

உள்ளூராட்சி சபைகளின் மாவட்ட ரீதியிலான சபைகள், வட்டாரங்கள், வேட்பாளர் எண்ணிக்கை, கட்டுப்பண விபரம் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது...

PDF icon 2312-44_T.pdf (215.87 KB)

PDF icon MR_2023_01_S.PDF (19.57 KB)

PDF icon MR_2023_02_S.PDF (16.79 KB)

PDF File: 

Add new comment

Or log in with...