‘கோப் - 27’ காலநிலை மாற்ற மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி எகிப்து பயணம்

- நவம்பர் 06 - 18 வரை மாநாடு
- நவம்பர் 07, 08 மாநாட்டில் பங்கேற்பார்
- ஜனாதிபதி ஊடகப் பிரிவில் எவரும் பயணிக்கவில்லை

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் - 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) அதிகாலை எகிப்து நோக்கிப் புறப்பட்டார்.

நவம்பர் 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளையும்  (07) நாளை மறுதினமும் (08) ஜனாதிபதி விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார்.

இதேவேளை அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

பரிஸ் ஒப்பந்தம் மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைய காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கோப்-27 இல் நாடுகள் ஒன்றிணைகின்றன.

கிளஸ்கோவில் நடந்த கோப் - 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச்  செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் எகிப்து சென்றுள்ளனர்.

இம்மாநாட்டை பார்வையிடுவதற்கான இணையவழி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் இது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் எவரும் இப்பயணத்தில் பங்கெடுக்கவில்லை.

எவ்வாறாயினும் இம்மாநாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் உள்நாட்டு ஊடகங்களுக்கு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...