22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம்: விவாதம் ஒக்டோபர் 20, 21 இல்

- பாராளுமன்றம் ஒக்டோபர் 18 - 21ஆம் திகதி வரை கூடும்
- பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விடயங்கள் அறிவிப்பு

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18
எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது.  அத்துடன் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

ஒக்டோபர் 19
ஒக்டோபர் 19ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 06 சட்டமூலங்களை விவாதத்துக்கு எடுக்கவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது. இதற்கமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 20
ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 21
அதேநேரம், எதிர்வரும் 21ஆம் திகதி பி.ப 5.30 மணி நடைபெறும் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவுக்கு வந்ததும் வாக்கெடுக்பை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட (முதலாவது மதிப்பீட்டுக்கு) இருப்பதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...