இடைக்கால பட்ஜெட்: ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைப்பு

- 60 வயதானோருக்கு டிசம்பர் 31 இல் ஓய்வு
- இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை
அடிப்படை நிலை ஊழியர்களின் சேவையை சிறந்த முறையில் பெற நடவடிக்கை

தற்பொழுது அரசாங்க (Government) மற்றும் பகுதியளவு அரச சேவையில் (Semi-Government) உள்ளவர்களின் ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆகக் குறைக்கப்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் யோசனை முன்வைத்துள்ளார்.

அதேபோன்று, தற்பொழுது சேவையிலுள்ள 60 வயதினை பூர்த்தி செய்து பணியில் ஈடுபட்டு வருகின்ற மேற்படி அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதி முதல் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

அரசாங்க சேவையிலுள்ள பதவியினரின் ஓய்வூதியம் பெறும் வயதினை 65 வரையும் பகுதியளவு அரச  சேவையிலுள்ள அலுவலர்களின் ஓய்வூதியம் பெறும் வயதினை 62 அதிகரித்ததனால் சமூகத்தில் வேலையற்ற இளைஞர்களின் விரக்திநிலை அதிகரித்துவருகின்றமை தெரியவந்துள்ளது.

அதே போன்று, பெரும்பாலான  பதவிகளில்   பதவியுயர்வு வழங்குகின்றபோது ஓய்வூதியம் பெறும் வயது அதிகரித்ததன் மூலம் பதவியுயர்வினை எதிர்பார்த்துள்ள பெரும் எண்ணிக்கையிலான அலுவலர்களுக்கு அச்சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

எனவே, இந்நிலையினை சீர்செய்வதற்கு ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அடிப்படை நிலை ஊழியர்களின் சேவையை சிறந்த முறையில் பெற நடவடிக்கை
அரசு நிறுவனங்களில் அடிப்படை நிலை ஊழியர்களின் சேவைகளை சிறந்த முறையில் பெறுவதற்காக முழு அரச சேவையையும் உள்ளடக்கிய வகையில் பணி ஆய்வு (Work- Study) ஒன்றினை 3 மாதத்திற்குள் மேற்கொண்டு அதன் அறிக்கையினை சிபாரிசுகளுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பணிக்கப்படுவார்.

5 வருடங்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல ஏற்கனவே அனுமதி
வினைத்திறன் மிக்க செலவு முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையினை சீர்செய்ய முன்மொழிந்த அவர், இதன் முதற்கட்டமாக 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்வதற்கு அல்லது பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு விரும்புகின்ற அரசாங்க ஊழியர்களுக்கு நாம் தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...