ஆங் சான் சூகி மீது மேலும் 6 வருட சிறைத் தண்டனை விதிப்பு

- இதுவரை  அவருக்கு 17 வருட சிறைத் தண்டனை

பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மேலும் 6 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங் சான் சூகி மீது ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) தீர்ப்பளிக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளில், சந்தை விலைக்குக் குறைவாக பொது நிலத்தை வாடகைக்கு எடுத்து, தொண்டு நோக்கமெனும் பெயரில் ஒரு குடியிருப்பைக் கட்டியமை தொடர்பிலும் சூகி தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒவ்வொன்றிற்கும் தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் மூன்று குற்றசாட்டுகளுக்கான தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளதால், அவருக்கு மொத்தமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

77 வயதான ஆங் சான் சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன், குறித்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகளால் மேனமுறையீடு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...