ஊடகவியலாளர்கள், போராட்டக்கார்கள் வெளிநாடுகளில் தஞ்சம்

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், போராட்டக்களத்தில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டுச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொருளாதார மற்றும் ஜீவனோபாயம் செய்வதற்கு போதுமான வருமானம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையும் இதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது.

கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளதுடன் இவற்றினால் பொதுமக்கள் பாரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள், எரிவாயு உட்பட அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பிரதான கருப்பொருளாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சிலர் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மாத்திரமன்றி தமது ஊடக ஆளடையாளங்களை தொங்கவிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளனர்.

அம்பாறை, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும்  தினகரன் - வாரமஞ்சரி பத்திரிகையின் ஊடகவியலாளராக செயற்பட்ட ஏ.ஆர். பரீத், தனது உயிர் அச்சுறுத்தல் காரணமாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளதுடன் தற்போது நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தினால் இவருக்கு பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ளதுடன் அநாமேதய தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன.அத்துடன் அவரது வீட்டுக்கு வந்து நேரடியாக இனந்தெரியாத நபர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற நிலையில்   இவ்வாறான சூழ்நிலையில் அவர் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னரும் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனைக் கருத்திற் கொண்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரைப் போன்று பல்வேறு நபர்கள் இன்று நாட்டை விட்டு வெளிநாடுகளில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.அத்துடன் இரகசிய பொலிஸார் ,இராணுவ உளவுப்பிரிவினர் நாடு பூராக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தூரநோக்கற்ற அரசியல் செயற்பாடுகளால் மக்கள் தற்போது பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமக்கு தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் இன்மையால் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் கடந்த மாதம் 22ம் திகதி நள்ளிரவில் கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் ஊடக பணியில் கடமையாற்றிய  சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தாக்கி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். அவர்களில்  பலர் காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.ஊடகவியலாளர் மீதான தக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு  பல்வேறு சர்வதேச மற்றும் ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- அசோகன்


UPDATE 

PDF File: 

Add new comment

Or log in with...