புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் வெற்றியீட்டியுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளைய தினம் (21) இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இப்பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வை,  பாராளுமன்ற அபைக்கு வௌியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

புதிய ஜனாதிபதி தெரிவு 

1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைய, வறிதான ஜனாதிபதி பதவிக்கு புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நேற்றையதினம் (19) வேட்புமனு கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இன்று (20) ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலின் வாக்களிப்பில்,

  • 223 பேர் வாக்களித்திருந்தனர்
  • 4 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன
  • 2 பேர் வாக்களிக்கவில்லை

(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சி உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்)

  • மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 219
  • ரணில் விக்ரமசிங்க - 134 வாக்குகள்
  • டளஸ் அழகப்பெரும - 82 வாக்குகள்
  • அநுர குமார திஸாநாயக்க - 03 வாக்குகள்

இரண்டாமிடம் பெற்ற வேட்பாளரின் வாக்குகளை விட 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவிவகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.

அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியைவகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


Add new comment

Or log in with...