ஜனாதிபதி கோட்டாபய ஜூலை 13ஆம் திகதி இராஜினாமா

- தன்னிடம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு
- எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்து  முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற ஏற்பாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதையடுத்து ஜனாதிபதி தனது தீர்மானத்தை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது ராஜினாமாவை அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்தும் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அமைதியாக ஆட்சியைப் பொறுப்பேற்கும் வகையில் நாட்டில் அமைதி நிலையை தக்க வைப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளதன் மூலம் சில தரப்பினர் வன்முறையை தூண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சபாநாயகர், இனியும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் அமைதியான வகையில் செயல்படுமாறும் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சாத்தியமாக நிறைவு செய்யும் வரை நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை இயல்பாக முன்னெடுத்துச் செல்லுமாறு அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் மக்களையும் கேட்டுக் கொள்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

சபாநயாகர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்...

09.07.2022

அதிமேதகு ஜனாதிபதி, 

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 

ஜனாதிபதி செயலகம்,

கொழும்பு -01

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, 

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக 

இன்று எனது தலைமையில் சபாநயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பெரும்பான்மையான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதன்போது பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சபாநாயகராகிய என்னால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரேரணைகளை உங்களிடம் முன்வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.  

  1. ஜனாதிபதி மற்று பிரதமர் விரைவில் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தல்

  2. பாராளுமன்ற ஜனநாயக முறைமைக்கு அமைய மற்றும் அரசியலமைப்புக்கு இணங்க அடுத்த கட்டமாகப் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஏழு நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டி பொது இணக்கப்பாட்டுடன் தீர்மானமொன்றை எடுத்தல்.

  3. அந்த ஜனாதிபதியின் கீழ் தற்பொழுது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல்.

  4. இதன் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்தி; புதிய பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்ய மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல். 

இதற்கு மேலதிகமாக கௌரவ பிரதமரினால் மூன்று மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

  1. உடனடியாக ஜனாதிபதி இராஜினாமா செய்து பிரதமர் பதில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

  2. அவ்வாறு நியமிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளினையும் ஒன்றிணைத்துப் புதிய பிரதமர் ஒரிவரின் தலைமையின் கீழ் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்தல்.

அல்லது

  1. ஜனாதிபதி பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலகி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு அதன் பின்னர் சர்வகட்சிகளின் இணக்கத்துடன் புதிய பிரதமர் ஒருவரை நியமித்தல், இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கல். 

 

நன்றி, 

 

மஹிந்த யாப்பா அபேவர்தன,

சபாநாயகர்


Add new comment

Or log in with...